சென்னை நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள மோகன்லால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் கடந்த 2020-ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்நிறுவனம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் மோகன்லால் ஜூவல்லர்ஸ் கடையில் இருபதுக்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும் நகைக்கடை உரிமையாளர், மேலாளர் மற்றும் கணக்காளர்கள் ஆகியோரிடம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நெல்லூரைச் சேர்ந்த ஹங்கீத் என்பவருக்கு சொந்தமான டிபி கோல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தங்கக் கட்டிகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடை, மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டிபி கோல்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியா முழுவதும் பல இடங்களில் கிளைகள் வைத்து தங்க விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் ஜேகே ஜுவல்லரி, சி எஸ் வி இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்நிறுவனங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிந்த பின்பே முழுமையாக தகவல்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.