ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை!
ரூ. 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9-ம் தேதி கைது செய்தனர். இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜாபர் சாதிக் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக அமலாக்கத் துறையும், திகார் சிறை நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும் ஓட்டல், ஆடம்பர பங்களா மற்றும் ஜாக்குவார், மெர்சிடிஸ் போன்ற 7 உயர் ரக வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.