இன்று ஈஸ்டர் : இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அற்புத நாள்..!
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளையே கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது. எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு "வசந்த காலம்" என்ற அர்த்தமும் உண்டு.
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்தினம் இரவு அவருடைய சீடர்களுடன் பஸ்கா உணவை பகிர்ந்து கொண்ட தினம் “பரிசுத்த வியாழன்” அதாவது மான்டி வியாழன் (Maundy Thursday) நினைவு கூறப்படுகிறது. புனிதவெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து பிறகு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்னரே தன் சீடர்களிடம் நான் மரித்த பின் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று இயேசு குறிப்பிட்டிருந்தார்.கல்லறையில் இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள், அவருடைய சீடர்கள் கல்லறைக்கு சென்ற போது கல்லறை காலியாக இருப்பதை கண்டனர். எனவே அந்த நாளில் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காகவே பலர் அவரை ‘கடவுளின் மகன்’ என்று அழைக்கிறார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் இந்த நாளை மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கொண்டாடுகிறார்கள்.
இந்த பண்டிகையின் முக்கிய அம்சம் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள். பொதுவாக ஈஸ்டர் பண்டிகையின்போது பரிசுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஈஸ்டர் தினத்தன்று முட்டை மறைத்து வைக்கப்பட்டு பரிசாக வழங்கப்படும். முட்டை அலங்கரித்தல் போன்ற விளையாட்டுகளும் அடங்கும். பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன.
கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கிபி 325 இல் தீர்மானம் போடப்பட்டது .அதன்படி மார்ச் 21ஆம் தேதிக்கு பிறகு வரும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை என கணக்கிடப்படுகிறது.
இதன்படி தான் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் கணக்கிடப்படுகிறது.மார்ச் 21 அன்று இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது .