களைகட்டிய தசரா....நாளை சூரசம்ஹாரம்...!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகளவில் பிரசித்தி பெற்றதாகும்.
தென்னிந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தசரா திருவிழாவாக இந்த திருவிழா நடைப்பெற்று வருகிறது. முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, சொந்த ஊரில் உள்ள கோயில் வளாகத்தில் தசரா பிறை அமைத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகன், ராமர், லட்சுமணன், நாராயணர், கிருஷ்ணர், காளி, அனுமார் உள்ளிட்ட சுவாமி வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகின்றனர். அப்போது கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதால், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர்.
விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாளை 24-ஆம் தேதி 10ம் நாள் அன்று இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசுரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.