1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளுக்கு அமைச்சர்களே துணையாக இருந்தனர்..!

Q

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால், அதுதொடர்பான குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருட்கள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை வைத்து சினிமாவில் முதலீடு செய்ததாகவும், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்ததாகவும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு(NCB) அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்குடன் திமுக தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்பில் இருந்தவர்களின் விவரம் அனைத்தும் NCB அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமாக வாய்ப்புள்ளதால் திமுகவினர் பலருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து இன்று புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”போதை பொருள் விவகாரத்தில் மடியில் கனம் இருப்பதால் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது”, என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
”திமுகவை களங்கப்படுத்த பாஜக செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. திமுகவை களங்கப்படுத்த பாஜக எடுக்கும் முயற்சியில் அதிமுகவும் கை கோர்த்துள்ளது. அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளுக்கு அமைச்சர்களே துணையாக இருந்தனர். போதை பொருள் தடுப்பில் திமுக அரசின் நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டியுள்ளது. NCB இயக்குநர் ஆரம்பத்திலேயே பேட்டி அளிப்பதும், கட்சி தலைமையினர் குறித்து பேட்டி அளிப்பதும் கண்டிக்கத்தக்கது. குஜராத்தின் முந்திரா துறைமுகத்தின் வழியே போதைப்பொருள் கடத்தப்படுகிறது”, இவ்வாறு ரகுபதி பேசினார்.

Trending News

Latest News

You May Like