போதைப்பொருள் வழக்கு - ஜாமின் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார்.
போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கிருஷ்ணா மனுவில் கூறியிருந்தார்.
காவல்துறை தரப்பில் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்கள் மூலமாக போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை விசாரிக்க வேண்டியிருக்கிறது என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இருவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்தார்.
மருத்துவ அறிக்கைகள் மற்றும் காவல்துறை ஆதாரங்களை ஆய்வு செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறி, தீர்ப்பை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தது. இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.