1. Home
  2. தமிழ்நாடு

முதலாளியை கொலை செய்துவிட்டு கார் தீப்பிடித்ததில் இறந்தது போல் நாடகமாடிய டிரைவர்..!

1

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் TN 64 F 1584 என்ற பதிவு எண் கொண்ட மாருதி ஷிப்ட் கார் ஒன்று நேற்று மாலை தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உப்பள தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது. 

மேலும் காரின் பின்புற டிக்கியில் ஒருவரது உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அவரது உடலில் வெள்ளி கொடியும், கழுத்தில் தங்க சங்கிலியும் எரிந்த நிலையில் உள்ளது. சம்பவ இடத்தின் அருகே ஒரு செல்போனும் கிடந்தது. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன், விளாத்திகுளம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்த விசாரணை நடத்தினர்.

Vilathikulam

காரின் நம்பர் மற்றும் செல்போனை கொண்டு விசாரணை நடத்தியதில் எரிந்து கிடந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த நாகஜோதி (48) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் நாகஜோதி பைனான்ஸ் தொழில் செய்து வந்ததும், நேற்று அவரது ஓட்டுநருடன் காரில் சென்ற நிலையில் மாயமானதும் தெரியவந்தது. 

இதையடுத்து நாகஜோதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணையில் நாகஜோதிக்கும், அவரது கார் ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ் (29) என்பவருக்கும் இடையே ரூ.2 லட்சம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் மைக்கேல்ராஜ், நாகஜோதியை நைசாக பேசி காரில் அழைத்து வந்துள்ளார். 

Vilathikulam PS

பின்னர் விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதிக்கு வந்த போது அங்கு மற்றொரு காரில் தயாராக இருந்து ஓட்டுநரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகஜோதியிடம் ரூ.50 லட்சம் தராவிட்டால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். ஆனால் நாகஜோதி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இந்த ஆத்திரத்தில் ஓட்டுநர் மைக்கேல்ராஜ் தனது கூட்டாளிகளான கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த மாரி என்ற மைக்கேல்ராஜ், கணபதி(28). கனி (25) ஆகியோருடன் சேர்ந்து நாகஜோதியை அடித்து கொலை செய்துள்ளனர். 

பின்னர் அவர் வந்த காரின் பின்புற டிக்கியில் நாகஜோதி உடலை வைத்து காரை தீ வைத்து எரித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் ஓட்டுநர் மைக்கேல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான மாரி, கணபதி, கனி ஆகிய 4 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like