உங்களிடம் ரேஷன் அட்டை இல்லையா..? இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது!

ரேஷன் அட்டையில்லை என்றால் மக்களால் பயனடைய முடியாத திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
- முதலில், ரேஷன் அட்டை இல்லையெனில் ரேஷன் கடைகளில் உங்களால் நியாய விலையில் சர்க்கரை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை பெற முடியாது. பொது விநியோக முறைப்படி (PDS) பல்வேறு உணவுப் பொருள்கள் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும். ஒருவேளை உங்களிடம் ரேஷன் அட்டை இல்லாவிட்டால் இதன் பயன்கள் உங்களுக்கு கிடைக்காது.
- ரேஷன் அட்டை இல்லையென்றால், நீங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் (BPL) இருந்தால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் அந்த பட்டியலில் சேர்க்கப்பட மாட்டீர்கள். வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போர் பட்டியலில் இணைய ரேஷன் அட்டை முக்கியம். உங்களிடம் ரேஷன் அட்டை இல்லையெனில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு கிடைக்கும் சலுகைகள், பயன்கள் கிடைக்காது. வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக பொருள்கள் வழங்கப்படுகிறது.
- பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ், நீங்கள் இலவசமாக சமையல் எரிவாயூ சிலிண்டர் இணைப்பை பெற வேண்டும் என நினைத்தால் நிச்சயம் ரேஷன் அட்டை தேவை. இந்த திட்டம் ஏழை எளிய பெண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு முக்கிய ஆவணமே ரேஷன் அட்டைதான். எனவே, ரேஷன் அட்டை இல்லாவிட்டால் இந்த திட்டத்தில் சேர முடியாது.
- பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா (PMJAY) திட்டத்தின்கீழ் மக்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயனடைய ரேஷன் அட்டை தேவை. ரேஷன் அட்டை இல்லாவிட்டால் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவது மிக மிக சிரமம்.
- மேலே குறிப்பிட்ட திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் உடையது. இதேபோல், ரேஷன் அட்டை இல்லையெனில் சில மாநில அரசு திட்டங்களிலும் உங்களால் பயனடைய முடியாது. உதாரணத்திற்கு, தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தி வரும் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) ரேஷன் அட்டை இல்லாமல் இணைய முடியாது. அத்திட்டத்தில் ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத் தலைவிகள் மட்டுமே பயனடைய முடியும். அதேபோல், பொங்கலை ஒட்டி தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற சலுகைகளும் கிடைக்காது.