அலட்சியம் வேண்டாம் மக்களே..! 6 மாதத்தில் 'ரேபிஸ்' நோய்க்கு 18 பேர் பலி..!

'ரேபிஸ்' தொற்றில் இருந்து, செல்லப்பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு, ஒரே வழியாக தடுப்பூசி உள்ளது.
நாய்களை பொறுத்தவரை, பிறந்த முதல் ஆண்டில் இருமுறை, 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஒருமுறை தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஆனால், சில தெருநாய்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதர்களை நாய்கள் கடிக்கும்போது, 'ரேபிஸ்' தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில், கடந்த ஆண்டில் மட்டும், நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில், 40 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் ஆறு மாதங்களில், 2.80 லட்சம் பேர் வரை, நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, சேலம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் மட்டும், 20,000 பேர் வரை, நாய்க்கடி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திருவண்ணாமலையில், 3, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா இருவர் என, மாநிலம் முழுதும் 18 பேர் ரேபிஸ் நோயால் இறந்து உள்ளனர்.
முறையான சிகிச்சை
நாய்க்கடிக்கு உள்ளானவர்களில், சிலர் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், காலதாமதமாக சிகிச்சை பெற்றதால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டாலும், அனைவரும் ரேபிஸ் நோயால் உயிரிழப்பது இல்லை. மேலும், நாய் கடித்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்பது இல்லை.
ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்றவை கடித்தாலும் பாதிப்பு ஏற்படும். எனவே, எவ்வகை விலங்கு கடித்தாலும், முறையாக சிகிச்சை பெற வேண்டும்.
அப்போது தான், ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியும். இதற்கான சிகிச்சை முறைகள், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தயார் நிலையில் உள்ளது. தடுப்பு மருந்துகளும் போதியளவில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.