இனி செல்போன் காணாமல் போனால் கவலை வேண்டாம்..! செல்போனை கண்டுபிடிக்க புதிய இணையதளம்..!

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை பிளாக் செய்து அவற்றை டிராக் செய்ய அகில இந்திய அளவில் ஒரு கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக சிஇஐஆர் - அதாவது மத்திய உபகரண அடையாளப் பதிவு தொழில்நுட்ப அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.
திருடப்பட்ட / தொலைந்த செல்போன்கள் குறித்து அதன் உரிமையாளர்கள் இதில் புகாரை பதிவு செய்தால் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட செல்போனின் செயல்பாடு முடக்கப்படும். அதன்பின்னர், அந்த செல்போனில் வேறு யாரேனும் சிம்கார்டு போட்டால் அது குறித்த தகவல், லைவ் லொக்கேஷன் சைபர் கிரைம் போலீஸாருக்கு தெரிந்துவிடும். இதை அடிப்படையாக வைத்து செல்போனை வைத்திருப்பவரின் இருப்பிடம் அறிந்து போலீஸாரால் நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்கான ‘லாகின்’ தமிழக சைபர் கிரைம் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் வழங்கப்படும். இனி புகார் அளித்தவர்கள் அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அவர்கள் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் அல்லது எப்ஐஆர் பெற்றுக் கொள்ளலாம். இதையடுத்து மீட்கப்படும் செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இது உதவியாக இருக்கும் என தமிழக சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் தெரிவித்தனர்.