1. Home
  2. தமிழ்நாடு

கவலையை விடுங்க..! வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதா! வந்தாச்சு ‘நாகம்’ செயலி!

1

 பாம்பு நாம் வாழும் இருப்பிடங்களுக்குள் வந்துவிட்டால், அதனை பார்த்த பயத்தில் அடித்து கொல்வதை பலரும் பார்த்து இருக்கிறோம். ஆனால் சிலர் பாம்பை கொன்றால் பாவம் என கருதி அதற்காக தீயணைப்புத் துறை, வனத்துறை, பாம்பு பிடி வீரர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக அகற்றி வனப்பகுதிகளுக்குள்ளும் விடுகின்றனர்.

இந்த நிலையில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாம்புகள் மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகளுக்குள் வந்தால் எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்த தகவல்களை அறிய வனத்துறை புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.

கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற செயலி ஏற்கனவே உள்ளது. கேரள வனத்துறை அந்த செயலிக்கு “சர்ப'' என்று பெயரிட்டிருக்கிறது. அதேபோல், தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலிக்கு ‘நாகம்' என்று பெயர் சூட்டியுள்ளது.நாகம் செயலியில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

செயலியின் பீட்டா பதிப்பை அதிகாரப்பூர்வமாக வனத்துறை அறிமுகம் செய்து வைத்தாலும், அதில் சில தகவல்கள், விஷயங்களை சேர்த்து முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வனத்துறை திட்டமிட்டு இருக்கிறது. உதாரணமாக பாம்பு பிடி வீரர்கள் தமிழகம் முழுவதும் இருக்கும் வகையில் பிரத்தியேக பயிற்சியை வனத்துறை வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கான பாம்பு பிடி உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் குடியிருக்கும் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ பாம்பை பார்த்தால் உடனடியாக நாகம் செயலி வாயிலாக புகார் தெரிவிக்கலாம். இந்த புகார் கிடைத்த உடனே பாம்பு பிடி வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைவாக வந்து அதனை பிடித்து வனப்பகுதிகளில் கொண்டு சென்று விடுவார்கள்.

பொதுமக்கள் பாம்புகளை பார்த்தவுடன் புகார் அளிக்கவும், உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கையை உறுதி செய்யவும், நாகம் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் புகார் அளித்தால், உடனடியாக பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அறிவியல் முறையில் பாம்புகளை பிடித்து, அதற்கான வாழ்விடத்தில் விடுவர்.
இச்செயலியில் பாம்பு பிடி பயிற்சி பெற்ற வீரர்கள் பெயர், மொபைல் எண், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கை, ஆண்டுவாரியாக பாதிக்கப்பட்டோர் விபரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இச்செயலி ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like