1. Home
  2. தமிழ்நாடு

ஆணவத் திமிரில் பேச வேண்டாம் - அண்ணாமலை பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்..!

1

சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில் அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அதிமுக மீது அண்ணாமலை வைத்த விமர்சனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் விமர்சனங்களை வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"2024-ல் அதிமுகவை ஒழித்துவிடுவேன் என்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. தம்பி, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. உன் பாட்டனைப் பார்த்த கட்சி. உன்னைப்போல எத்தனையோ பேர் இப்படி கொக்கரித்தார்கள். ஆணவத் திமிரில் இப்படிப் பேசாதப்பா.

அதிமுக என்ற கட்சி இல்லையென்றால், தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்காது, ஏற்றம் பெற்றிருக்காது.

எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கியது ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெற, தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்காக இந்தக் கட்சியைத் தொடங்கினார்கள்.

ஜெயலலிதா இந்தக் கட்சியைக் காத்து ஆட்சி செய்தார்கள். தமிழ்நாட்டில் அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த காரணத்தினால், இந்த மண்ணில் உள்ள அத்தனை பேரும் நன்மை பெற்றார்கள்.

எங்களுடையக் கட்சியையா நீ அழிக்கப் பார்க்கிறாய்?

1998-ல் தாமரைச் சின்னம் உள்ளது என்பதை ஊர் ஊராகச் சென்று காட்டியதே அதிமுகதான். தாமரைச் சின்னம் எந்தக் கட்சி என்று தெரியாத காலம் அந்தக் காலம். அப்போது ஜெயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். அப்போதுதான் நம்முடைய கட்சிக்காரர்கள் எல்லோரிடம் சென்று இதுதான் பாஜகவின் சின்னம் என்று சொன்னார்கள்.

இந்தக் கட்சி இன்று நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

நீங்களெல்லாம் நியமனம் செய்யப்பட்டவர்கள். மத்தியில் உள்ளவர்கள் உங்களை நியமனம் செய்தால்தான் நீங்கள் தலைவர்.

ஆனால், அதிமுகவில் உழைப்பவர்கள் தலைவராக வர முடியும். நான் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து முதல்வரானேன். இங்கே உழைத்தால் ஏற்றம் வரும், அங்கு தில்லியில் மனது வைத்தால் தலைவராகலாம்.

நீங்கள் நியமனம் செய்யப்பட்ட தலைவர். எப்படி ஐபிஎஸ் படித்துச் சென்றீர்களோ அப்படிதான் தலைவராகியிருக்கிறீர்கள். கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள், அதிமுக ஒரு மாதிரியான கட்சி. புரிந்துகொள்ளுங்கள். கருணாநிதியையும் பார்த்துவிட்டோம், ஸ்டாலினையும் பார்த்துவிட்டோம். எத்தனையோ தலைவர்களைப் பார்த்து யாருக்கும் அஞ்சாமல், யாருக்கும் அடிமையாக இல்லாமல், துணிச்சலோடு இன்று சவால் விட்டிருக்கிற கட்சி அதிமுக.

100 திட்டங்களை 500 நாள்களில் நிறைவேற்றுகிறேன் என்கிறார். பொய்யைப் பொருந்துகிற மாதிரி பேசினால், மெய் முழிக்குமாம்.

ஏற்கெனவே 2021-ல் ஒருவர் 520 அறிவிப்புகளை வெளியிட்டு, அவர் வந்து நாட்டு மக்களை ஏமாற்றியது போதாது என்று, நீ வேற பொய்மூட்டையை அவிழ்த்துவிடுகிறாய்.

இத்தனை நாள்களாக ஏன் நிறைவேற்றவில்லை? இதுவரைக்கும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையா?

கவுன்சிலராக முடியவில்லை, எம்எல்ஏ ஆக முடியவில்லை, எம்பி ஆக முடியவில்லை. நீ வந்து இவ்வளவு வக்காலத்து வாங்கி அதிமுகவை ஒழிப்பாயா. எப்படியெல்லாம் பேசுகிறார்கள்.

எம்ஜிஆர் ஒரு படத்தில் பாடுவார். பதவி வரும்போது பணிவு வர வேண்டும் என்பார். அது உங்களிடம் இல்லை. தலைக் கர்வத்தில் ஆட வேண்டாம். இதெல்லாம் நிலைக்காது. என்றைக்கும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து, அதைத் திரும்பப் பெற்றால்தான் மனிதராகப் பிறந்தவர்களுக்கு மரியாதை உண்டு. அது அவர்களிடத்தில் கிடையாது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Trending News

Latest News

You May Like