சொந்த வீடு இல்லையா? யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும்? எங்கே சென்று விண்ணப்பிக்க வேண்டும்?
நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இணையும் பயனாளிகளுக்கு வீடு கட்ட மானிய உதவி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மிக எளிதில் வீட்டுக் கடன் கிடைக்கும். இத்திட்டத்தில் நிறைய சலுகைகள் உள்ளன.
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அடுத்த சில ஆண்டுகளில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் மொத்தம் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு ஆவாஸ் யோஜனா திட்டத்திற்காக ரூ. 10 லட்சம் கோடி முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கமே பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (LIG) ஆகிய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவதாகும். இதனால் நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நிரந்தர வீடு கிடைக்கும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் நோக்கம் நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் வீட்டு வசதியை வழங்குவதாகும். ஆனால் அதன் முக்கிய கவனம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் மீது மட்டுமே உள்ளது. அதாவது, ஏழை மக்களுக்கு மட்டுமே வீடு கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும், நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும் கட்டப்படும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏற்கனவே நிரந்தர வீடு இல்லாதவர்களுக்கானது. குடும்ப வருமானம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) அல்லது குறைந்த வருமானம் கொண்ட குழு (LIG) பிரிவில் அடங்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு அதிக நன்மை பயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் பயன்பெற விரும்பினால் முதலில் https://pmaymis.gov.in/ என்ற முகவரியில் உள்நுழைய வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள “Citizen Assessment” பகுதிக்குச் சென்று, உங்கள் தகுதியின்படி “For Slum Dwellers” அல்லது “Benefit Under Other 3 Components” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு "Check" பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பெயர், முகவரி, மொபைல் எண், குடும்ப வருமானம், வங்கி விவரங்கள் மற்றும் வயது தொடர்பான தகவல்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். இறுதியாக கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, "Submit" பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்பித்த பிறகு நீங்கள் ஒரு விண்ணப்ப எண்ணைப் பெறுவீர்கள். அது எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்ப செயல்முறையும் உங்களுக்கு உள்ளது. அதற்கு நீங்கள் அருகிலுள்ள பொதுச் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான உதவியைப் பெறுவீர்கள். மேலும், தேவையான ஆவணங்களின் நகல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.