1. Home
  2. தமிழ்நாடு

மிஸ் பண்ணாதீங்க..! உங்களை தேடி வரும் தமிழக அரசு திட்டங்கள்..!

1

மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூன் 4ஆம் தேதி முதல் இந்த முகாம் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 30 நாள்களுக்கு நடைபெறும்.   

பல்வேறு காரணங்களினால் நீண்ட நாட்களாக பட்டா மாறுதல் செய்ய முடியாமல் இருப்பது, தனி பட்டாவாக மாறாமல் இருப்பது, முதியோர் உதவித்தொகை பெற முடியாமல் இருப்பது, புதிய தொழில் தொடங்க கடனுதவி, மின் இணைப்பு கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்த முகாமில் பொதுமக்கள் பயன்பெறலாம். 

இந்த கோரிக்கைகளுக்காக மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைந்து சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகமே மக்களைத் தேடி வந்து குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திடும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.  

இதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அனைத்து முதல் நிலை அலுவலர்களும் முகாம் நடைபெறும் ஊராட்சிகளில் பொதுமக்களை தேடி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காக வருகை தருவார்கள். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைந்து திரிந்த காலம் மாறி தற்போது அரசு அலுவலர்களே அனைத்து பகுதி கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.   

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, தொழிலாளர் நலத்துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெற முடியாமல் இருக்கும் பயனாளிகள் தங்களது கோரிக்கையை மனுவாக வழங்கினால் முறையாக விசாரித்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்திட்டங்கள் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.  

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.   இத்திட்டங்களை மாணவ, மாணவியர் உள்பட பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்து இந்த முகாமினை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like