ரயிலில் மட்டும் இந்த பொருளை கொண்டு வந்துடாதீங்க.. மீறினால் கடும் தண்டனை!! -
தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்சணங்களுடன் பட்டாசுகளும் தான். மற்ற பண்டிகைகளை காட்டிலும் தீபாவளியின் சிறப்பே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வது தான். இப்பவே பல இடங்களில் தெருவோர பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை கோலாகலமாக நடந்து வருகிறது.
கிராமங்களில் இருந்து வந்து நகரங்களில் தங்கி வேலை செய்து வரும் மக்கள் தீபாவளிக்கு அவரவர் ஊர்களுக்கு செல்வது வழக்கம். நகரங்களில் வசிப்பவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று பட்டாசுகளை ரயில் மூலமாகவோ அல்லது பேருந்துகளிலோ கொண்டு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் ”ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். விபத்து ஏற்பட்டால் உடன் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கும் சேர்த்தே ஆபத்து விளைகிறது. எனவே, விதியை மீறி பட்டாசுகளை கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறையாக பட்டாசுகளுடன் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதி மீறல்களில் ஈடுபட்டால் 3 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், 5000 அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.