இனி இதை பண்ணாதீங்க! ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும்...!
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. மதுரையைச் சேர்ந்த இளைஞர் பைசல் என்பவர் இட்லி மாவு தயாரிக்க ரேஷன் அரிசி பயன்படுத்தி வந்ததும், பிளாக்கில் அரிசி வாங்கி விற்பனை செய்து வந்ததையும் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் ஒருசம்பவம் தூத்துக்குடியில் நடந்திருக்கிறது. 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மாவை அதிகாரிகள் ரகசிய தகவலின் அடிப்படையில் கண்டுபிடித்தனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட அரிசியை கண்டுபிடித்தபிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அப்போது, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பேசும்போது, ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரேஷன் அரிசி கடத்தல்கார்களுக்கு ரேஷன் அரிசி விற்பனை செய்பவர்கள் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்பி கூறியிருப்பதாவது:- ரேஷன் அரிசியை யாரும் வீட்டில் பதுக்கி வைத்து அதனை கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் கொடுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் யார் இதனை செய்தார்களோ அவர்களது ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் ரேஷன் அரிசி கடத்துவது கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.