அரசியல் செய்யாதீங்க..! அரசியல் செய்வோருக்கு தோல்விதான் மிஞ்சும் - மா.சுப்பிரமணியன்..!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், மா.சுப்பிரமணியன் கூறியதாவது: விமான சாகசம் பார்வையிட வந்த யாரும் உயிரிழக்கவில்லை என அரசு கூறவில்லை. வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. யாரும் கூட்ட நெரிசல் காரணமாகவோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றியோ யாரும் உயிரிழக்கவில்லை. வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது.
5 பேர் உயிரிழந்ததற்கு வெயிலின் தாக்கம் தான் காரணம். வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். விமான சாகச நிகழ்ச்சியில், போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.
அரசியல் செய்ய நினைத்தால் அவர்கள் பெயிலியர் ஆகிவிடுவார்கள். உயிரிழப்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் இரண்டு முறை ஆலோசனை நடந்தது. விமானப்படை கேட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் 65 டாக்டர்கள் தயாராக இருந்தனர். தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது என இந்திய விமானப்படையும் கூறியுள்ளது. இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும். குடை, தண்ணீர் எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.