1. Home
  2. தமிழ்நாடு

யாரும் பயப்பட வேண்டாம்..! மீண்டும் கொரோனா வந்தாலும் சமாளிக்கத் தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!

1

தமிழகத்திலும் கொரோனா தன் கோரதாண்டவத்தை நிகழ்த்திவிட்டே சென்றது. எனினும், 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு கொரோனா வீரியம் குறைந்து மெல்ல மெல்ல பரவலும் குறைந்தது. இதனால் மக்கள் வழக்கம் போல தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால் ஆக்சிஜன், மருத்துவப் படுக்கைகள், வெண்டிலேட்டர் மற்றும் மருந்துப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அத்துடன், இருமல் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5755 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக நம் அண்டை மாநிலமாக கேரளாவில் 1806 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில் வாரங்களில் 59 பேர் வரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். பரவுவது லேசான கொரோனா வைரஸ்தான் என்றும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ளும் முன் எச்சரிக்கையாக கொரோனா தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் எதிரொலியாக கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை, இருந்தாலும் பாதுகாப்பிற்காக அணிவது நல்லது என்றும், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மீண்டும் கொரோனா தொற்று பரவல் வந்தால் அதனை சமாளிக்க அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. கொரோனா தொடர்பாக மத்திய அரசு எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடவில்லை. கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது. 95,000 மருத்துவப் படுக்கைகள் கொண்ட கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. தற்போது 3,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமித்து வைக்கக்கூடிய வசதி உள்ளது.

2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று ஆல்பா, பீட்டா மற்றும் ஒமிக்ரான் என உருமாற்றம் அடைந்தது. தற்போது பரவுவது வீரியமற்ற கொரோனா, பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்றே கூறுகிறார்கள். இனி கொரோனா பாதிப்புகள் வந்து போகத்தான் செய்யும். தற்போது பரவுவது வீரிமற்ற கொரோனா என்பதால், தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் சுகாதார விதிகளை கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகின்றன. புதிதாக பணியில் சேரும் நபர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு விரும்பும் இடங்களில் நியமனம் தரப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like