அவன மாதிரி சைக்கோவை விடாதிங்க சார்... அரைமணி நேரம் கெஞ்சி போராடினேன் - கர்ப்பிணியின் வேதனை குரல்!

திருப்பதிக்கு நேற்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த 4 மாத கர்ப்பிணி பெண், பாலியல் தொல்லைக்கு ஆளாகி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜை (30) ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து கர்ப்பிணி பெண் கூறியதாவது, ஜோலார்பேட்டையில் நான் பயணித்த பெண்கள் பெட்டியில் இருந்து அனைத்து பெண்களும் இறங்கி விட்டார்கள் நான் மட்டுமே இருந்தேன். அப்போது ரயில் புறப்படும் சமயத்தில் அந்த பையன் ஏறினான். அப்போது நான் சொன்னேன் இது லேடிஸ் கோட்ஸ், நான் மட்டும்தான் இருக்கிறேன் இறங்கி விடுங்கள் என கூறினேன். அதற்கு அந்தப் பையன் ரயில் புறப்பட்டு விட்டது. அடுத்த நிறுத்தமான காட்பாடியில் இறங்கி விடுகிறேன் எனக் கூறினான். நானும் ஓரமாக சென்று அமர்ந்து விட்டேன். கொஞ்ச நேரம் பெட்டியில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தவன் திடீரென காணவில்லை பிறகு கழிவறையில் இருந்து உடைகள் இல்லாமல் வந்தான்.
எனது வயிற்றில் குழந்தை இருக்கிறது உனக்கும் அக்கா தங்கை இருப்பார்கள், அவர்களாக என்னை நினைத்து விட்டு விடு என கூறி செயினை இழுப்பதற்காக சீட்டின் மீது ஏறினேன். உடனே எனது தலைமுடியை பிடித்து இழுத்து அடித்தான், நானும் பதிலுக்கு அவனை அடித்தேன். உடனே கழிவறைக்கு சென்று கதவை தாளித்துக் கொண்டு அங்கிருந்து சங்கிலியை இழுக்கலாம் என முயற்சித்தேன். அங்கும் வந்து என்னை தரதரவென இழுத்து அடித்து எனது வலது கையை உடைத்து விட்டான். ஒரு கையை வைத்துக் கொண்டு கெட்டியாக ரயிலை பிடித்துக் கொண்டிருந்தேன் பிறகு எனது காலை கீழே தள்ளிவிட்டு அதன் பிறகு என்னை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டான். அதன் பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, பிறகு ஆம்புலன்ஸ் வந்து என்னை கூட்டி வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். என்னை பாதுகாத்துக் கொள்வதற்காக சுமார் அரை மணி நேரமாக அவனோடு சண்டை போட்டு போராடினேன்.
எனக்கு நடந்தது போல இனி எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. முடிந்த அளவுக்கு அவனுக்கு ஏதாவது தண்டனை வாங்கி கொடுங்க. அவன் ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான், அவன் வெளியே திரிவதால் தான் எனக்கு இந்த மாதிரி நடந்துள்ளது. இனியும் இதுபோன்று செய்ய மாட்டான் என என்ன நிச்சயம். இந்த சைக்கோவை எல்லாம் வெளியே விடாதீங்க.
அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து விடுங்கள், அவன் சிறையில் இருந்து வெளியே வரவே கூடாது. இப்ப எல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது, ரயிலிலும் கிடையாது நடந்து போகும் போதும் கிடையாது. அதனால இந்த மாதிரி ஆட்களை விடாதீர்கள்” என தனது வேதனை கலந்த குமுறலை வெளிப்படுத்தினார்.