1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு..!

1

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடந்த 9-ம் தேதி காயங்களுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு எதிராக மேற்கு வங்காளம் மட்டுமின்றி நாடு முழுவதும் டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டத்துக்கு மத்தியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு கும்பல் புகுந்து சூறையாடியது. இதில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு, மருந்து அறை உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. பெண் டாக்டர் கொலையில் ஆதாரங்களை அழிப்பதற்கு நடந்த முயற்சி இது என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். இந்த வன்முறை தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த சூறையாடல் விவகாரத்தில் 3 போலீஸ் அதிகாரிகளை மாநில அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதன்படி 2 துணை போலீஸ் கமிஷனர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தானாக வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை வந்தது.

அப்போது பயிற்சி டாக்டர் கொலை குறித்து முதலில் விசாரித்த கொல்கத்தா போலீசாரும், இதனையடுத்து விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கிய சி.பி.ஐ.-யும் சுப்ரீம்கோர்ட்டில் தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர். சி.பி.ஐ. தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையில், பெண் டாக்டரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதாகவே பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சம்பவம் நடந்து 5வது நாள் மருத்துவமனைக்கு விசாரணைக்காக சென்றபோது குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொல்கத்தா காவல்துறையும் இந்த வழக்கு தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. இதனை அடுத்து சி.பி.ஐ. மற்றும் கொல்கத்தா போலீசார் தாக்கல் செய்த நிலை அறிக்கைகளை சுப்ரீம்கோர்ட் பதிவு செய்தது.

அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. கொல்கத்தா டாக்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் டாக்டர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுகின்றனர். டாக்டர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். 

அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் பயிற்சி டாக்டர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அகில இந்திய டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் எங்களின் கவலைகள் சுப்ரீம் கோர்ட்டால் நிவர்த்தி செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தம் நிறுத்தப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கிறோம். எங்களது அனைத்து கடமைகளையும் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த அசம்பாவிதம், நம் நாட்டில் டாக்டர்கள் பணிபுரியும் வருந்தத்தக்க நிலையை எடுத்துக்காட்டுகிறது. இன்று (ஆகஸ்ட் 23 ம் தேதி) காலை 8 மணி முதல் சேவைகளை மீண்டும் தொடங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கொடூரமாக கொல்லப்பட்ட பெண் டாக்டரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமான குறிப்புகளையும் உடனடியாக நீக்க சமூக வலைதளங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி உயிரிழந்த பெண் டாக்டரின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சமூக ஊடகங்கள், மின்னணு ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களை சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இணங்குமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்பட உயிரிழந்தவர் தொடர்பான அனைத்து குறிப்புகளையும் உடனடியாக நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like