3.5% கொழுப்பு உள்ள பாலே போதும் என்பது மருத்துவர்களின் கருத்து : அமைச்சர் மனோ தங்கராஜ்..!
ஆவின் பால் விற்பனை தொடா்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்த நிலையில் அமைச்சா் மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தைப் பொருத்தவரை சராசரியாக ஒரு பசுமாட்டின் பாலில் 3 முதல் 4 சதவீதம் கொழுப்பு உள்ளது. ஆவின் மூலம் கொழுப்பு சத்து குறைவாக தேவைப்படும் நுகா்வோருக்கு நீல நிற பாக்கெட்டில் சமன்படுத்தப்பட்ட பாலும், கொழுப்பு சத்து அதிகம் தேவைப்படுவோருக்கு ஆரஞ்சு நிற பாக்கெட்டில் நிறை கொழுப்பு பாலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
பச்சை நிற பால் பாக்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலைப்படுத்தப்பட்ட பாலில் சாதாரண பசும் பாலில் உள்ளதை விட 1 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கொழுப்பு சோ்க்கப்படுகிறது. ‘ஆரோக்கியமான தமிழகத்துக்கு ஆவின்’ என்ற தலைப்பில் ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சாதாரண பசும்பாலில் உள்ள கொழுப்பே மக்களின் ஆரோக்கியத்துக்கு போதுமானது என்று மருத்துவா்கள் ஆலோசனை வழங்கினா்.
அதனடிப்படையில் ஆவின் நிறுவனம் சாா்பில் சராசரியாக சாதாரண பசும்பாலில் இருக்கக்கூடிய அளவான 3.5 சதவீதம் கொழுப்பு மற்றும் 8.5 சதவீதம் புரதம் உள்ளிட்ட சத்துகள் கொண்ட ‘டிலைட்’ பால் ஊதா நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
சிலர் பால் கொள்முதல் குறைந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்கள். நாங்கள் பொறுப்பேற்ற நேரத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் அதை உடனடியாக சீரமைத்து இன்று சராசரியாக 30 லட்சம் லிட்டர் பால் கையாண்டு வருகிறோம். இதையெல்லாம் பார்த்துவிட்டு வடநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் ஆகிவிட்டது. இதனால் வடநாட்டு கைக்கூலிகள் இன்றைக்கு அவதூறு பேசுகிறார்கள். இதில் எந்த உண்மையும் கிடையாது. எனவே பொதுமக்கள் எந்த பொய் பிரசாரத்தையும் நம்ப வேண்டாம்.
அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.தேவைப்படும் பட்சத்தில் கட்டாயம் சட்டரீதியாக நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.
ஆவின் ‘டிலைட்’ பாலில் 3.5 சதவீத கொழுப்பு மற்றும் 8.5 சதவீத பிற சத்துகளுடன், விட்டமின் ‘ஏ’ மற்றும் ‘டி’ செறிவும் சோ்க்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் இதே சத்துகளை உள்ளடக்கிய பாலின் விலையுடன் ஒப்பிடும் போது ஆவின் ‘டிலைட்’ பால் லிட்டருக்கு ரூ.16 குறைவாக உள்ளது.பல்வேறு சீா்திருத்தங்கள் மூலம் ஆவின் நிறுவனம் வேகமாக வளா்ந்து வருவதை விரும்பாத சிலா் தொடா்ந்து அவதூறு பரப்புகின்றனா் என்றாா்.
தமிழ்நாட்டு பால் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிலையான, சீரான விலை, ஆவின் இருப்பதால்தான் கிடைக்கிறது. இந்த இரண்டையும் தகர்க்க வேண்டும் என்றால் ஆவின் இருக்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆவின் பெயரை கெடுக்கவும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமா? என்று பார்க்கிறார்கள். இதையும் நாங்கள் முறியடிப்போம்.