டாக்டர் கத்திக்குத்து: கைதானவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு..!
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே அரசு மருத்துவமனையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டாக்டர் பாலாஜியை, நேரில் சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவருடைய குடும்பத்தினரிடமும், டாக்டர்களிடமும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "கடந்த ஜனவரி மாதம் முதல் எனது தாய்க்கு டாக்டர் பாலாஜியிடம் சிகிச்சைக்கு சென்றேன். எனது தாய்க்கு கீமோ சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது தாயின் உடல் நிலை தேறியது. தனியார் மருத்துவமனையில் ஒவ்வொறு முறை சிகிச்சைக்கும் 20 ஆயிரம் வரை செலவானது.
எனது தாய்க்கு, முறையாக சிகிச்சை அளிக்காத டாக்டர் பாலாஜியிடம் மருத்துவ செலவுக்கான பணத்தை தருமாறு கேட்டேன். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்டர் பாலாஜி என்னை திட்டி கீழே தள்ளினார். அப்போது ஆத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தினேன்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.