குழந்தையின் தொப்புள் கொடி விவகாரம் - இர்பானால் சிக்கலில் மருத்துவர்?
பிரபல யூட்யூபரான இர்பான் அவரது யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டார்.
வீடியோவில் 11வது நிமிடத்தில் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அரசு பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்குக்குள் செல்ல வேண்டும். மேலும் கத்தரிக்கோல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மட்டுமே கையாள வேண்டும்.
ஆனால் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டியது சட்டப்படி தவறு என மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை பறந்தது.
இதற்கிடையே இர்பான் மீது எந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? என தெளிவுபடுத்தும் படி ஊரக நலப் பணிகள் இயக்குனரகத்திற்கு செம்மஞ்சேரி போலீசார் கடிதம் எழுதினர். இந்த நிலையில் இர்பான் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அவர் கைதாகலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த இர்பான் தற்போது சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இர்பானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதாவிற்கு மீண்டும் சிக்கல் முளைத்திருக்கிறது. ஏற்கனவே அவரது மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மருத்துவம் பார்க்க தடை விதித்ததோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் வீடியோ எடுக்க அனுமதித்தது எப்படி? தொப்புள் கொடியை வெட்ட இர்பானுக்கு அனுமதி கொடுத்தது யார்? உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.