உங்கள் குடும்ப அட்டையில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமா..? இன்று அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி பிப்ரவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
தங்கள் குடும்ப அட்டையில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் அல்லது குறைகளை இருந்தால், அதனை சரி செய்துக்கொள்ள பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
அதுமட்டுமில்லாமல் வயது மூப்புக் காரணமாக நியாய விலைக் கடைகளில் பொருள் வாங்க நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், உங்கள் பகுதியில் உள்ள பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலோ, பொது விநியோகக் கடைகளின் பொருட்கள் தனியார் சந்தையில் விற்கப்பட்டாலோ, அதுக்குறித்து புகார்கள் ஏதேனும் இருந்தால், பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதனையடுத்து உங்கள் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
.png)