சாலையில் வரையப்பட்டிருக்கும் இந்த கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா ?
சாலைகளில் செல்லும் போது நடுவே வெள்ளையாகவும், மஞ்சளாகவும் கோடுகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அவை எதைக் குறிக்கின்றன என்பது தெரியுமா? ஒவ்வொரு கோட்டின் வடிவத்துக்கும் தனித் தனிப் பொருள் உள்ளது. பெரும்பாலானோர் அவற்றைப் பொருட்படுத்தாததாலும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதததாலுமே அதிக அளவில் சாலை விபத்துகள் நேர்கின்றன.
1) மத்தியில் உள்ள உடைந்த கோடுகள்; சாலைக்கு நடுவே வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகள் வாகனங்கள் செல்லும் பாதையைப் பிரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு திசையில் நாம் செல்லும்போது, நமக்கு எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கான பாதையை அறிந்து கொள்வதற்கும், சாலையில் எந்தப் புறம் நாம் செல்ல வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தவும் மத்தியில் உள்ள உடைந்த கோடுகள் வரையப்படுகின்றன.
நீளமான வெள்ளை கோடு :சாலையின் நடுவே எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் நீளமான வெள்ளை கோடு போடப்பட்டிருந்தால் அந்த சாலையில் வேகமாக செல்லக்கூடாது. அதேபோல அந்த சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல கூடாது என்று அர்த்தம்.
இடைவெளி விட்டு வெள்ளை கோடு :அதேபோல் சாலையில் வெள்ளை கோடுகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தால்
இடது புறமாக செல்லும் வாகன ஓட்டிகள், முன்னால் செல்லும் வாகனங்களை வலது புறம் கவனத்துடன் முந்தி செல்லலாம் என்று அர்த்தம். அதேபோல அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என்றும் அர்த்தம்.
சாலைக்கு நடுவே தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் ஒன்று அல்லது இரண்டு கோடுகள் வரையப்பட்டிருக்கும். இது எதற்குத் தெரியுமா? இந்தச் சாலைகளில் இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். அவசர கால வாகனங்களைத் தவிர பிற வண்டிகள், முந்திச் செல்லக் கூடாது என்பதை உணர்த்தும் குறியீடுகள் அவை.
சாலைகளின் இரு ஓரத்திலும் நீளமாக வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகள் எதற்கு? இது பெரும்பாலனோருக்குத் தெரிவதில்லை. சாலையின் விளிம்பு மிக அருகில் இருக்கிறது, கவனமாகச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே அந்தக் கோடுகள் போடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் குறைந்த வெளிச்சத்தில் கூட ஒளரும் வகையில் அவை அமைக்கப்பட்டிருக்கும். சாலையை விட்டு வாகனங்கள் கீழே இறங்கி விபத்துக்குள்ளாமல் இருப்பதற்கான ஏற்பாடு அது.
சாலைக்கு நடுவே நேரான அம்புக் குறி அல்லது வளைவான அம்புக் குறி வரையப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். நேர் அம்புக் குறியானது சாலை வளையாமல் நேராகச் செல்கிறது என்பதை உணர்த்தும். இடது அல்லது வலது பக்கம் வளைந்த அம்புக் குறியானது, நீங்கள் எடுக்கும் சாலையின் வளைவுக்குத் தக்கவாறு பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.