நீங்க குளத்துக்கு என்ன பேர் வச்சீங்க தெரியுமா? - எடப்பாடி பழனிசாமிக்கு பொன்முடி பதிலடி..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம் என்று விமர்சனம் செய்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன என குற்றம் சாட்டினார்..
இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனத் துறை அமைச்சர் பொன்முடி, “எடப்பாடி பழனிசாமி பெயர் வைப்பதைப் பற்றியெல்லாம் பேசி வருகிறார். விழுப்புரத்தில் இருந்த ஒரு குளத்திற்கு அம்மா குளம் என நகராட்சி மூலம் பெயர் சூட்டினார்கள். அதிமுக ஆட்சியில் அவர்கள் செய்ததை எல்லாம் மறந்துவிட்டு எதையாவது பேசுவார்கள். ஆனால், அம்மா குளம் என்ற பெயரை அதிமுக ஆட்சியில் வைத்தார்கள் என்பதற்காக நாங்கள் அதனை நீக்கவில்லை. அந்த பெயரில்தான் அந்த குளம் உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோரையும் மதித்து மிகவும் நாகரீகமாக அரசியல் செய்யக்கூடியவர். அந்த வகையில்தான் மூன்றரை ஆண்டு கால ஆட்சி நடந்துள்ளது. எதிர்க்கட்சி என்பதால் அரசியல் செய்ய வேண்டும் என எதாவது பேசி வருகிறார்கள். ஆனால், அதிமுக குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வரின் விழுப்புரம் பயணத் திட்டம் பற்றி விவரித்த அமைச்சர் பொன்முடி, “எல்லிசத்திரம் அணையை முதல்வர் திறந்து வைக்கிறார், இடஒதுக்கீட்டுக்காக போராடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 பேரின் நினைவு மண்டபம் திறப்பு விழா, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு மண்டபம் மற்றும் நலத் திட்டங்கள் வழங்கும் விழாவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.