பொதுப்பணித் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் மேட்டூர் எம்.எல்.ஏ என்ன செய்தார் தெரியுமா ?
சேலம் வட்ட பொதுப்பணித்துறை கட்டிடம் அலுவலகத்துக்கு நேற்று காலை மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் வந்தார். அங்கு மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர் இல்லாததால், தனது லெட்டர் பேடில் ‘அறிவிப்பு’ என்ற தலைப்பிட்டு, அதை, அங்குள்ள கணக்குப் பிரிவு அலுவலக சுவரில் ஒட்டினார்.
கடந்த மூன்று தினங்களாக கண்காணிப்பு செயற்பொறியாளரை சந்திக்க நேரில் அலுவலகத்திற்கு வந்ததாகவும் ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை என்றும் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார்.
அவரை தொலைபேசியில் அழைத்த போது தொலைபேசியையும் எடுக்கவில்லை என்றும் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் மகாவிஷ்ணு ஆகிய இருவரும் கடந்த மூன்று நாட்களாக அலுவலகத்தில் வரவில்லை எனவும், அரசு வாகனத்தை பயன்படுத்தி கமிஷன் தொகை வசூலிப்பதற்காக சென்று விட்டதாக அந்த நோட்டீஸில் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருவர் மீதும் துறை வாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் மூலம் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ சதா சிவம் கூறுகையில், ‘மேட்டூர், குஞ்சாண்டியூர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில், வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட வேண்டியுள்ளது. 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் காவிரி பாலம், சுகாதாரத்துறை குடியிருப்பு ஆகியவை பழுதடைந்துள்ளன. இந்த கோரிக்கைகள் டெண்டரில் வரவில்லை.எனவே, 3 முறை வந்திருந்தும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. அதனால், கோபத்தில் இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டிய தாகிவிட்டது. அதிகாரிகள் 2 மாதத்துக்குள் மேட்டூர் தொகுதிக்கு வேண்டிய கட்டிடங்களை அமைச்சரிடம் தெரிவித்து, கட்டிக் கொடுப்பதாக தெரிவித்தனர்’ என்றார்.