ஜி20 தலைவர்களுக்கு மாபெரும் விருந்து - என்ன மெனு தெரியுமா ?

டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் 18-வது ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு 2 நாள் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதையொட்டி, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜி20 மாநாட்டையொட்டி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார். இந்த விருந்தில் பங்கேற்க முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, 170 முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலான சைவ, அசைவ உணவுகள் விருந்தில் இடம்பெற்றுள்ளன. விருந்தின்போது 50 - 60 இசைகலைஞர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.
என்ன மெனு?: “மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றின் கலவையான பாரதம் பல வழிகளில் வேறுபட்டது. அதன் சுவை நம்மை இணைக்கிறது. இன்றைய உணவுகள் பாரதம் முழுவதும் உள்ள பொருட்களின் செல்வத்தை வெளிப்படுத்துகிறது. 'வசுதைவ குடும்பகம்' - அதாவது, 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற அடிப்படையில் நமது வளமான சமையல் பாரம்பரியத்தை மெனு வெளிப்படுத்துகிறது" என்ற அறிமுகத்துடன் இரவு உணவின் மெனு பேப்பர் உள்ளது.
ஸ்டார்ட்ஸ்: தினை அரிசியில் செய்யப்பட்ட மிருதுவான தயிர் உருண்டை மற்றும் மசாலா சட்னி.
மெயின் கோர்ஸ்: காளான்கள், பலாப்பழ கேலட், கேரளா சிவப்பு அரிசி மற்றும் சிறு தினையால் செய்யப்பட்ட கறிவேப்பிலை தோசை.
ரொட்டிகள்: மும்பை பாவ் மற்றும் பக்கர்கானி.
இனிப்புகள்: ஏலக்காய் வாசனையுள்ள பார்னியார்ட் தினை புட்டு, அத்தி-பீச் கம்போட் மற்றும் அம்பேமோஹர் ரைஸ் கிரிப்ஸ்
பானங்கள்: காஷ்மீரி கஹ்வா, பில்டர் காபி மற்றும் டார்ஜிலிங் டீ. இதுதவிர சாக்லேட் இலைகள் கொண்ட பீடா