1. Home
  2. தமிழ்நாடு

மும்மொழி கொள்கை விவகாரத்தில் இயக்குநர் பேரரசு என்ன சொன்னார் தெரியுமா ?

1

சென்னை வடபழனியில் இயக்குநர் ஏ.எல்.விஜய் புதிதாக போஸ்ட் புரோடக்ஷன் ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அதன்படி இயக்குநர் பேரரசும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பேரரசு மும்மொழி கொள்கை தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மும்மொழி கொள்கை விவகாரத்தைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகள் குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மற்ற பள்ளிகளில் படிப்போர் தமிழக மாணவர்கள் இல்லையா.. அந்த பள்ளிகள் தமிழ்நாட்டில் இல்லையா.. சிபிஎஸ்இ பள்ளியாக இருந்தாலும் எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் சரி தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும்.

இந்தியை விரும்பினால் படிக்கட்டும்.. இல்லையென்றால் விட்டுவிடலாம்.. தமிழ்நாடு அரசும் தமிழக அரசியல்வாதிகளும் தமிழுக்கு என்ன கவனம் செலுத்தியுள்ளனர்? 10, 12 வயதுக் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை. தமிழ் மாணவர்களின் நிலை இப்படி தான் இருக்கிறது.. அப்படி இருக்கும் போது இந்தியை எதிர்ப்போம்.. இந்தியைத் துரத்துவோம் என்பதில் என்ன லாபம்.. இதனால் தமிழ் வளர்ந்துவிடுமா..

இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்கிறார்கள். ஆனால், உண்மையில் தமிழ் ஏற்கனவே அழிந்து கொண்டு தான் இருக்கிறது. அதைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? தமிழ் குழந்தைகள் இன்று தமிழைப் பேசுகிறார்களே தவிர எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை.இன்று சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி, தெலுங்கு, கன்னடம் எல்லாம் விருப்ப மொழிகளாக இருப்பது ஓகே.. ஆனால், தமிழே விருப்ப பாடமாகத் தான் இருக்கும் என்பது வேதனை தரும் விஷயம். தமிழ் விருப்ப மொழியாக இருக்கக்கூடாது. கட்டாய பாடமாகவே இருக்க வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்குப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றால் அங்கு விருப்ப பாடம் எனத் தமிழும் இந்தியும் இருக்கிறது. அந்த பெற்றோர்களும் தமிழ் தான் வீட்டில் பேசுகிறோமோ என இந்தியைத் தேர்வு செய்துவிடுகிறார்கள். 3 வருடங்களில் அந்த குழந்தை இந்தியில் எழுதவும் படிக்கவும் செய்கிறது. ஆனால், தமிழில் பேச மட்டுமே தெரிகிறது. விருப்ப பாட லிஸ்டில் தமிழ் இருப்பதால் தானே இப்படிச் செய்கிறார்கள். இந்தியைப் படித்தால் படிக்கட்டும்.. தமிழைக் கட்டாயம் என மாற்றலாமே. அதுதான் சம தர்மம். சமூக நீதி.

இரு மொழி கொள்கை தான் என்றால் ஓகே ஏற்கிறோம். ஆனால் மாநிலம் முழுக்க உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த கொள்கையை அமல்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு ஒன்று தனியார் பள்ளிகளுக்கு ஒன்று என இருக்கக்கூடாது. ஏழை மாணவர்களுக்கு ஒரு கொள்கை பணக்கார மாணவர்களுக்கு ஒரு கொள்கை என்பது இருக்கக்கூடாது. இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் வேண்டாம் என நான் சொல்லவில்லை.. தமிழ் முக்கியம் என்றே நான் சொல்கிறேன். அரசுப் பள்ளிகளில் இருக்கும் கொள்கையைத் தான் தனியார்ப் பள்ளிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறேன்" என்றார்.

Trending News

Latest News

You May Like