இது தெரியுமா ? தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் கிடைக்கும்..!
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கான திட்டங்கள் நிறைய உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் இ-ஷ்ரம் கார்டு திட்டம். இத்திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டில் உள்ள அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் மகள்களின் திருமணம் முதல் மருத்துவ சிகிச்சைகள் வரை திட்டங்கள் உள்ளன.
அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பதிவு செய்த பின், அரசு இ-லேபர் கார்டை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டு வழங்கப்படுகிறது. 16 வயது முதல் 59 வயது வரை உள்ள எந்த ஒரு அமைப்புசாரா துறை ஊழியர்களும் இ-ஷ்ரம் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.
இ-ஷ்ரம் கார்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதி உள்ள தொழிலாளர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். E-Shram கார்டுக்கு விண்ணப்பிக்க, eshram.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.
இணையதளத்தில் உங்களால் பதிவு செய்ய முடியவில்லை என்றால், அரசு இ-சேவை மையம் அல்லது CSC மையத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.
இ-ஷ்ரம் கார்டுக்கு பதிவு செய்ய, தொழிலாளர்களுக்கு சில முக்கிய ஆவணங்கள் தேவை. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம் போன்றவை தேவைப்படும்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில், இ-ஷ்ரம் கார்டுக்கான பதிவை நீங்கள் எளிதாக செய்யலாம். அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு, ஒரு போர்ட்டலையும் உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 60 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 நிதியுதவி வழங்கப்படுகிறது. போர்ட்டலில் பதிவு செய்த பிறகு அனைத்து தொழிலாளர்களுக்கும் இ-ஷ்ரம் கார்டு வழங்கப்படும்.
இதன் மூலம் அவர்கள் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த லேபர் கார்டில் 12 இலக்க எண்கள் உள்ளன. இது ஒரு வகையில் தொழிலாளர்களின் அடையாள அட்டையாக இருக்கிறது.இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதி கிடைக்கும். விபத்தில் தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
விபத்தில் தொழிலாளி ஒருவர் பகுதி ஊனமுற்றால், அவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு UAN வழங்கப்படுகிறது. அதனால் அரசின் திட்டங்களின் பலனைப் பெறலாம். இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் விண்ணப்பிக்கலாம்.