1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? தமிழ்நாடு தினம் நவ.1 பதில் ஜூலை.18 மாற்றப்பட்டது ஏன்?

1

1947-ல் விடுதலை அடைந்த போது தமிழ்நாடு மாநிலம் இல்லை. சென்னை மாகாணம் தான் இருந்தது. அதில் இன்றைய தமிழ்நாடும், ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தின் பல பகுதிகளும் இருந்தன. 

தமிழகத்தைச் சேர்ந்த பெரியார், அண்ணா, ஜீவா, ம.பொ.சி, நேசமணி, சங்கரலிங்கனார் தலைவர்கள் மாகாணங்களை மொழி அடிப்படையில் பிரிப்பது குறித்து போராட்டங்கள் நடத்தினர். இவர்களது கோரிக்கையை அப்போதைய எதிர்தரப்பு தலைவர்களான ராஜாஜி, கோல்வாக்கர் போன்றோர் எதிர்த்தனர். ஆனால், அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு மொழிவாரி மாகாணங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அப்போது இந்தியாவிற்குள் அடங்கியிருந்த மாகாணங்கள் அனைத்தும் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. மெட்ராஸ் மாகாணமாக இருந்த பகுதிகள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் அடிப்படையில் நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.தமிழ்நாடு என்ற பெயர் பின்னாளில் வந்தாலும், இன்றைய தமிழ்நாடு மாநிலமாக உருவானது 1956 நவம்பர் 1. அந்நாளை தமிழ்நாடு தினமாக அனைவரும் கொண்டாடி வருகிறோம்.

பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் வைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்திய விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் போராட்டத்தின்போதே உயிர் நீத்தார். 1967ஆம் ஆண்டு முதல்வரான பேரறிஞர் அண்ணா ஜூலை 18ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அது சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா அதே ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

அனைத்தும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதியில் மாநில நாளைக் கொண்டாடி வருகின்றன. 

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும்  தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது.

 

Trending News

Latest News

You May Like