இது தெரியுமா ? இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும், கிடைக்காது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்; உச்ச வயது ஏதுமில்லை. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது.
ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கப்படாது. பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடையில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழக அரசின் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்தத் திட்டத்தில் பலன் பெற முடியாது. சிறு தொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் உரிமைத் தொகையைப் பெறுவர். சுமார் ஒரு கோடி பேர் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெறுவார்கள்.
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மகளிர் உரிமைத் தொகையைப் பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
தமிழக நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு முதல்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.