1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? திருமலை திருப்பதியில் ஐந்து ஸ்ரீநிவாசப் பெருமாள்கள் வீற்றிருந்த அருள் செய்கிறார்கள்..!

1

உலகின் பணக்கார கடவுளாக இருக்கும் திருப்பதி வெங்கடேஷ பெருமாள் ஏராளமானவர்களுக்கு குலதெய்வமாக இருந்து வருகிறார். கலியுகத்தில் கேட்டதை தரும், பக்தர்களின் துயரங்களை போக்கும் கண் கண்ட தெய்வமாக இருப்பவர் திருப்பதி ஏழுமலையான். இவரை காண தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், எத்தனை குளிர், மழை, கூட்ட நெரிசல் இருந்தாலும் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருமலையில் குவியும் பக்தர்கள், உண்டியலில் வசூலாகும் காணிக்கையே பக்தர்கள் ஏழுமலையான் மீது கொண்டுள்ள பக்தியை சொல்லி விடும். எத்தனையோ பெருமாள் கோவில்கள் இருந்தாலும் திருமலை திருப்பதி பக்தர்களை ஈர்ப்பதற்கு காரணம் இங்கு நிறைந்திருக்கும் அற்புதங்களே ஆகும். இதன் மகிமைகளை, பெருமைகளை, வியக்க வைக்கும் ஆச்சரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். திருமலையை பற்றி பலரும் அறியாத பல அரிய விஷயங்கள் உள்ளன.

அவற்றில் திருமலையில் உள்ள ஐந்து ஸ்ரீநிவாச பெருமாள்கள் மற்றும் ஏழுமலை பற்றிய அற்புதமான, அரிய தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ள உள்ளோம். 

திருப்பதியில் இருக்கும் ஏழு மலைகளுக்கு வேங்கடமலை, சேஷ மலை, வேத மலை, கருட மலை, விருஷப மலை, அஞ்சன மலை, ஆனந்த மலை என்று பெயர். இவற்றுள் வேங்கடமலையில் தான் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கொண்டுள்ளார். இந்த ஏழு மலைகளும் சப்தகிரி என்றும் அழைக்கப்படுகின்றன.

1. வேங்கடமலை - வேம் என்றால் பாவம். கட என்றால் போக்குவது. பாவங்களை போக்கும் மலை என்பதால் இதை வேங்கடமலை என்கிறார்கள். இங்குள்ள மூலவர் சுயம்புமூர்த்தியாக தோன்றியவர். இவரது திருமேனி அரியவகை சாளகிராமத்தால் ஆனது. இது ஆறு மலைகளை கடந்து ஏழாவது மலையாக விளங்குகிறது. மேலிருந்து பார்த்தால் இதுவே முதல் மலையாகும். இது வெங்கடாத்ரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

2. சேஷ மலை - திருமால், ஸ்ரீநிவாசராக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்ததால் அவரை தாங்குவதற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். எனவே அவரது பெயரால் இது ஆதிசேஷ மலை என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷன் நின்ற கோலத்தில் பெருமாளை தாங்கிக் கொண்டிருப்பதாக கருதப்படும் சேஷமலை இரண்டாவது மலையாக உள்ளது. இது சேஷாத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

3. வேதமலை - நான்கு வேதங்களும் இங்கு மலை வடிவில் இருங்கு எம்பெருமானை வழிபட்ட காரணத்தால் இது வேத மலை என்றழைக்கப்படுகிறது. இதை நாராயணாத்திரி என்றும் அழைக்கிறோம்.

4. கருட மலை - பெருமாளை வணங்குவதற்காக வந்த கருடாழ்வார், வைகுண்டத்திலிருந்து எடுத்து வந்த மலை என்பதால் இது அவருடைய பெயரால் கருட மலை என்றும், கருடாத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

5. விருஷப மலை : விருஷபன் என்ற அசுரனுக்கு இங்கு திருமால் மோட்சம் அளித்ததால் இது விருஷப மலை என பெயர் பெற்றது. இதை விருஷபாத்திரி என்றும் அழைக்கிறார்கள்.

6. அஞ்சன மலை - ஆஞ்சநேயரின் தாயான அஞ்சனை, குழந்தை பாக்கியம் வேண்டி திருலையில் உள்ள ஆதிவராகப் பெருளை நோக்கி தவமிருந்தாள். இதன் பலவாக ஆஞ்சநேயரை பெற்றார். சிறந்த ராம பக்தரான ஆஞ்நேயர் அவதரிக்க காரணமாக அஞ்சனை தவம் செய்த மலை என்பதால் இது அஞ்சன மலை என்றும், அஞ்சனாத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

7. ஆனந்த மலை - ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை நடுவராக இருந்து திருமால் தீர்த்த வைத்து, இருவரையும் மனம் குளிர செய்ததால் இந்த மலைக்கு ஆனந்த மலை என்று பெயர். இது நீலாத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.

1. த்ருவ ஸ்ரீநிவாசர் :

இவரே மூலவராக இருந்து அருள் செய்கிறார். சுமார் ஏழு அடி உயரம் கொண்ட இவர் கோவிந்தன், பாலாஜி, ஸ்ரீவாரி, ஸ்தானக மூர்த்தி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஏகாந்த சேவைக்கு பிறகு இவரை பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கி செல்வதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாசர் :

கருவறையில் மூலவருக்கு அருகில் இவர் உள்ளார். கெளதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. புதன்கிழமை தோறும் காலையில் இவருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். அப்போது மட்டுமே, எட்டு அங்குல உயர கொண்ட, வெள்ளியால் ஆன இவரை தரிசிக்க முடியும்.

3. கொலுவு ஸ்ரீநிவாசர் :

கருவறையில் தினமும் தோமாலை சேவைக்கு பிறகு ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் இவர் எழுந்தருளுவார். இவரிடம் அன்றைய நாளின் பஞ்சாங்கம், கோவிலின் வரவு - செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விபரங்கள், உற்சவ விபரங்கள் ஆகியவற்றை ஆலய புரோகிதர் அறிவிப்பார். இந்த நிகழ்ச்சியின் போது ஆலய புரோகிதர்கள், ஊழியர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

4. உக்ர ஸ்ரீநிவாசர் :

இவருக்கு வேங்கடத்து உறைவார் என்று பெயர். 14 ம் நூற்றாண்டு வரை இவரே உற்சவ மூர்த்தியாக இருந்தார். இவர் மீது சூரிய ஒளி பட்டால் இவர் உக்கிரமாகி விடுவாராம். அவ்வாறு நடந்தால் பல கெடுபலன்கள் ஏற்படும். அதனால் தான் இவருக்கு பதிலாக மலையப்ப சுவாமியே உற்சவ மூர்த்தியாக உள்ளார். இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் துவாதசி அன்று மட்டும் அதிகாலை 3 மணியளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வார் உக்ர ஸ்ரீநிவாசர்.


5. உற்சவ ஸ்ரீநிவாசர் :

மலையப்ப சுவாமி, மலை குனிய நின்ற பெருமாள், உற்சவ பேரர் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் உற்சவ ஸ்ரீநிவாசர் நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் எப்போதும் கஸ்தூரி திலகத்துடன் காட்சி அளிப்பார். இந்த மலையப்ப சுவாமியே பல ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, திருக்கல்யாண உற்சவம் காண்கிறார். அதே சமயம் திருமலையில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளும் மலையப்ப சுவாமியும் இவரும் ஒன்று கிடையாது. திருமலையில் உற்சவங்களின் போது பக்தர்களுக்கு அருள் செய்யும் மலையப்ப சுவாமி, திருமலையில் மட்டுமே இருப்பார்.

Trending News

Latest News

You May Like