இது தெரியுமா ? தினமும் 16 சூரிய உதயங்களைக் காணும் சுனிதா வில்லியம்ஸ்!

சுனிதா வில்லியம்ஸ் 8 நாள் பயணத்திற்காக விண்வெளிக்குச் சென்றார். ஆனால், 9 மாதங்களுக்குப் பிறகுதான் அவர் பூமிக்குத் திரும்பும் நேரம் வந்திருக்கிறது. பல பிரச்சனைகளுக்குப் பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருடன் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்லிங்க் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
தொழில்நுட்ப காரணங்களால் விண்கலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு திரும்ப வேண்டியதாயிற்று. பின்னர், அவர்கள் இருவரையும் திரும்பக் கொண்டுவரும் முயற்சிகள் பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்தது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமும் அவர்களை மீட்க கூட்டு முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5.57 மணிக்கு புளோரிடா கடற்கரைக்கு அருகில் உள்ள கடல் நீரில் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில் தரையிறங்குவார்கள். பின் ஒவ்வொருவராக வெளியே கொண்டுவரப்படுவார்கள்.
பொதுவாக பூமியில் இருப்பவர்கள் ஒரு நாளில் ஒரே ஒருமுறைதான் சூரிய உதயத்தைப் பார்க்க முடியும். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்த 9 மாதங்களில் தினமும் 16 சூரிய உதயங்களையும், 16 சூரிய அஸ்தமனங்களையும் பார்த்திருக்கிறார். இது எப்படி சாத்தியம்?
சுனிதா வில்லியம்ஸ் சென்ற சர்வதேச விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வேகமாகச் சுழல்கிறது. இது பூமியை ஒருமுறை சுற்றி வர சுமார் 90 நிமிடங்கள் ஆகும். இந்தக் கணக்கின்படி, சர்வதேச விண்வெளி நிலையம் 24 மணிநேரத்தில் சுமார் 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. ஒவ்வொரு முறையும் பூமியைச் சுற்றி வரும்போது, ஒருமுறை சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் நடைபெறும். இதனால், விண்வெளி நிலையத்தில் இருப்பவர்கள் 24 மணிநேரத்தில் 16 சூரிய அஸ்தமனங்களையும் 16 சூரிய உதயங்களையும் பார்க்கலாம்.