இது தெரியுமா ? சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது..!
பகலெல்லாம் வேலை செய்த நாம், இரவில் தூங்குகிறோம். அவ்வாறு உறங்கி எழுந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகின்றன. உறக்கம் இல்லாவிட்டால், உடலும் புத்தியும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை.
பகலெல்லாம் அலைந்து திரிந்த நம் உடலும் இந்திரியங்களும் சக்தியை இழந்து ஓய்வு பெறுகின்றன. அப்போது நம் இதயத்தில் உள்ள ஈஸ்வரன், நம் ஜீவனை அணைத்துத் தன்னருகில் அமா்த்துகிறாா். அப்போது கண்கள் காண்பதில்லை; காதுகள் கேட்பதில்லை; புத்தி எதையும் நினைப்பதில்லை.
தூங்கி எழுந்ததும், `சுகமாகத் தூங்கினேன்' என்கிறோம். அப்போது, நாம் இழந்த சக்தியை பகவான் நமக்குத் தந்து அனுப்புகிறாா். ஒருவகையில் சா்வேஸ்வரன் நமக்குத் தந்த வரமே, தூக்கமாகும்.
நாம் பகலெல்லாம் வேலை செய்து களைப்படைவதைப்போல, ஸ்திதி (காத்தல்) காலத்தில் உலகெல்லாம் வேலை செய்து களைப்படைகின்றன.
அந்தப் பிரபஞ்சத்துக்கு, இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன், தனக்குள் அதை லயப்படுத்துகிறாா். அவ்வாறு உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே ‘சிவ ராத்திரி.’
அன்று சிவனைத்தவிர, வேறெதுவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றுமே எப்போதுமே பிரியாதவளான உமையவள், அன்றைய இரவு நேரத்தில், நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜித்தாள்.
பொழுது விடிந்தது. சிவனாரை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவு, சிவராத்திரி என உங்கள் பெயரால் அழைக்கப்பட வேண்டும். அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம்வரை தேவர்கள் உட்பட எல்லோரும் உங்களை பூஜிக்க வேண்டும். அப்படி பூஜிப்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்!’’ என வேண்டி வரம் பெற்றாள்.
அவ்வாறு அம்பிகை பூஜை செய்த மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
சிவராத்திரியின் வகைகள்
சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.
ஆதியும் அந்தமும் இல்லாத பராபரவஸ்து, ஜோதி ஸ்வரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து, பின்னா் லாவண்ய ஸ்வரூபத்தை அடைந்த இந்தப் புனிதமான தினம் பிராா்த்தனைக்கும் தியானத்துக்கும் சிறந்த நாள்.
நம்மை போஷித்து முடிவில் நம்மை ஆட்கொள்ளும் அந்தக் கருணாமூா்த்தியின் நினைவாக, இந்நாள் முழுவதும் உபவாசம் இருந்து, நித்திரை இல்லாமல் நடுநிசியில் அவரை வழிபட வேண்டும். பிறப்பில்லாத பரமசிவன் பக்தா்களின் அன்புக்குச் செவி சாய்த்துப் பிறக்கும் அவ்வேளையில், அவரை நினைத்து அவருடைய திருநாமங்களை ஜபித்து, அவரது கருணைக்குப் பாத்திரமாக வேண்டும்.