1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? திங்கள் கிழமை வரும் அமாவாசையன்று அரச மரத்தை குறைந்தது 7 முறையாவது சுற்றி வர வேண்டும்..!

1

 சந்திரன் முழுமையாக மறைந்திருக்கும் நாளை அமாவாசை அமைவாதல்,மறைமதி என்றும் சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் 'NEW MOON' என்று சொல்வார்கள்.... அதாவது புது நிலவு... அது ஒரு இருள் நிறைந்த வட்டம் போல இருக்கும். சமஸ்கிருத்ததில் "அமா' என்றால் "ஒன்றாக" மற்றும் "வஸ்யா" என்றால் இணைந்து வாழ்வது என்று பொருள்.

சந்திரன் பூமியை முழுமையாக சுற்றி வர எடுக்கும் காலம் சந்திர மாதம் ஆகும். நம் கண்ணுக்கு முற்றிலும் தெரியாத நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழு வட்டமாக தெரியும் நிலைக்கு வரும். பின்னர் சிறிது சிறிதாக தேய்ந்து முற்றிலும் தெரியாத நிலைக்கு வரும். அதன் கால அளவு 29 நாட்கள் 12 மணி 44 நிமிடங்கள் 3.00 வினாடி என்று கணக்கிட்டு உள்ளார்கள்.

வளர்பிறை காலம் 'சுக்ல பட்சம்' என்றும் தேய்பிறை காலம் 'கிருஷ்ண பட்சம்' என்றும் அழைக்கப்படுகிறது.இந்த இரண்டும் 14 திதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கு சந்திர நாட்கள் என்று பெயர். அவைகள் முறையே பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி,சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி ஆகும்.

இந்துக்கள் தங்கள் குடும்பத்தில் முக்கியமான விசேஷங்களை வளர்பிறையில் வைப்பார்கள். முக்கிய பண்டிகையான தீபாவளி ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை வழிபட வேண்டும். நமது மூதாதையர்களை குறிக்கும் சொல் 'பித்ரு' ஆகும். அன்றைய தினத்தில் முன்னோர்கள் நம் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். இது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. அப்படி முன்னோர்கள் வரும் அந்த நாளில் அவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்து படையலிட்டு வழிபட வேண்டும். அன்றைய தினத்தில் பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக இருக்கும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதை போக்கி அவர்களை வழிபட்டால் அக்குடும்பத்திற்கு நீண்ட ஆயுள் அழியாப் புகழ், உடல் வலிமை, செல்வம் ஆகியவற்றை அவர்கள் வழங்குவார்கள்.

அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து அதை படையலிட்டு பிறகு அதில் கொஞ்சம் எடுத்து காக்கையை சாப்பிட அழைத்து வைக்க வேண்டும். கூடி வாழ்ந்து சேர்ந்து உண்ணும் வழக்கம் காகங்களிடம் மட்டுமே உள்ளது. நம் முன்னோர்கள் காகங்கள் வடிவில் வந்து நாம் அளிப்பதை பெற்றுக் கொள்வார்கள் என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை.

அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம். அன்றைய தினத்தில் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. வசதிக்கு ஏற்றது போல ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்களை செய்யலாம்.

அமாவாசை வரும் தினத்தில் நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். ஜீரண மண்டலம், மூளை,நீர் சத்து ஆகியவைகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது அதனால்தான் அந்த நாட்களை விரத நாட்களாக நம் முன்னோர்கள் மாற்றி விட்டார்கள். அதை சரி செய்யும் காய்கறிகள் பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், வாழைக்காய், வாழைத்தண்டு, பூசணிக்காய், மிளகு, கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நியதியை காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள் இந்துக்கள். பூண்டு, வெங்காயம் சமையலில் தவிர்க்கப்பட வேண்டும்.. அஜீரண கோளாறு வரும் வாய்ப்புகள் இருப்பதால் அசைவம் கூடாது.

அமாவாசை திதி துவங்குவதற்கு முன்பு வீட்டில் தரையை மெழுகி சுத்தம் செய்வது, உடுத்திய துணிமணிகளை துவைத்து உலர வைப்பது, பூஜை பாத்திரங்களை விளக்கி வைப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும். பொதுவாக அமாவாசை விரதம் பகலில்தான் நடத்தப்படுகிறது. ஒரு திதி முதல் நாளில் தொடங்கினால் மறுநாள் பகல் பொழுதிலும் இருக்கும். அமாவாசை விரதம் இருப்பவர்கள் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கலாம். ஊறவைத்த பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுக்கலாம். வீட்டில் பூஜை அறையில் தெய்வ படங்களுக்கு பூ சாற்றி அலங்காரம் செய்து வழிபடலாம்.

மதிய உணவு வாழை இலை போட்டு படையல் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். காகங்களுக்கு உணவு வைத்த பிறகு வீட்டில் உள்ளவர்கள் உணவு உண்ணவேண்டும்...குறிப்பாக வாழை இலையில் பரிமாற வேண்டும். விரதம் இருப்பவர்கள் அன்று இரவு பால் பழம் மட்டும் எளிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்...

சோமாவதி அமாவாசை : திங்கள் கிழமை வரும் அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர். சந்திரன் ஆதிக்கம் அதிகமாக உள்ள திங்கள் கிழமையில் அமாவாசை வருவது இன்னும் சிறப்பு. இந்த நாளில் அரச மரத்தை குறைந்தது 7 முறையாவது சுற்றுவது நல்லது. அரசமரம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் சொரூபமாக சொல்வார்கள். "மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத சிவ ரூபாய விருட்ச ராஜாயதே நமஹ" - இந்த மூல மந்திரம் சொல்லி வணங்கினால் நல்லது நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
 

Trending News

Latest News

You May Like