இது தெரியுமா ? நவராத்திரியின் 4-ம் நாள் வழிபாடு என்பது மகாலட்சுமியை வழிபட துவங்குவதன் முதல் நாளாகும்..!
நவராத்திரியின் நான்காம் நாள் வழிபாடு என்பது மகாலட்சுமியை வழிபட துவங்குவதன் முதல் நாளாகும். மகாலட்சுமி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான தெய்வம். மகாலட்சுமியானவள் திருமகள், அலைமகள் என பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறாள். நவராத்திரியில் நாம் வழிபடக் கூடிய மகாலட்சுமி என்ற அலைமகள், பாற்கடலில் இருந்து தோன்றியவள். பொதுவாக மனிதர்களுக்கு நரை, திரை, மூப்பு, பிணி போன்றவை இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தேவர்களுக்கு இதெல்லாம் கிடையாது என சொல்லப்படுகிறது. இருந்தாலும் முற்காலத்தில் அவர்களுக்கும் நரை, திரை, மூப்பு, பிணி ஆகியவை இருந்துள்ளது. இதனால் கடும் அவதி அடைந்த தேவர்கள், இதில் இருந்து விடுபட பிரம்ம தேவரிடம் வழி கேட்டுள்ளனர்.
பாற்கடலை கடைந்த தேவர்கள்
ஆனால் பிரம்ம தேவரோ, "நானே திரை என்ற நிலைக்கு வந்து விட்டேன். ஏடுகளை பக்கத்தில் வைத்து பார்த்தால் தெரிவதில்லை. கொஞ்சம் தள்ளி வைத்தால் தான் தெரிகிறது. இதனால் இதற்கு நாராயணனிடம் சென்று உபாயம் கேட்போம்" என செல்கிறார்கள். விஷயம் கேட்டறிந்த நாராயணன், "நான் பள்ளி கொண்டுள்ள பாற்கடலில் அமிர்தம் உள்ளது. அதை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு, பிணி போன்றவைகள் நெருங்காது" என்றார். இதனால் பாற்கடலை கடைய முடிவு செய்யப்பட்டது. பாற்கடலை கடந்த நிகழ்வு என்பது பல கிளை கதைகளை உடையது. விஷ்ணு புராணம் உள்ளிட்ட பலவும் பல கதைகளை சொல்கின்றன.
பாற்கடலை கடைந்த கதை
துரத்திய ஆல கால விஷம்
மேரு கிரி மலையை மத்தாக மாற்றி, வாசுகி பாம்பினை கயிறாக கொண்டும் பாற்கடலை கடைய முடிவு செய்தனர். பாற்கடலை கடைய மேருகிரி மலையை தாங்கி பிடிக்க மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்தார். மலையை தனது முதுகில் தாங்கி, பாற்கடலை கடைய துணை நின்றார். அசுரர்களின் துணையுடன் பாற்கடலை கடைந்தனர். வாசுகி பாம்பின் தலை பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்துக் கொண்டு கிட்டதட்ட 1000 ஆண்டுகள் பாற்கடலை கடைந்தனர். இதனால் வலி தாங்காமல் விஷத்தை உமிழ்ந்தது பாம்பு. பாம்பின் விஷம் ஒரு புறமும், பாற்கடலில் இருந்து முதலில் வெளிப்பட்ட ஆல காலம் விஷமும் இணைந்து தேவர்களை துரத்தியது.
அனைவரும் ஓடிச் சென்று, கைலாஷத்தில் தஞ்சம் புகுந்து, சிவபெருமானிடம் விஷயத்தை சொல்லி முறையிட்டனர். அதோடு பாற்கடலில் இருந்து தோன்றும் முதல் பொருள் உங்களுக்கு தான் என்றனர். இதை கேட்டு சிரித்தபடியே, தனது அருகில் திருநீற்றுப்பெட்டியுடன் நின்று கொண்டிருந்த தனது பிம்பமான சுந்தரமூர்த்தி நாயனாரிடம், "சுந்தரா...அவ்விடத்தை, இவ்விடத்தே கொண்டு வா" என்று. சுந்தரரும் சிவபெருமான் சொன்னாபடியே சென்று, தேவர்களாலும் தாங்க முடியாத விஷத்தை சிறிய நெல்லிக்காய் அளவில் திரட்டி கொண்டு வந்து விட்டார். அதை வாங்கி, அப்படியே வாயில் போட்டார் ஈசன்.
விஷம் உண்ட சிவன்
நீலகண்டனான சிவபெருமான்
அந்த விஷத்தை விழுங்கினால் உள்ளே உள்ள உயிர்கள் இறந்து விடும். வெளியே உமிழ்ந்தால் வெளியே உள்ள உயிர்கள் இறந்து விடும். அதனால் விழுங்கவும் இல்லாமல், உமிழவும் செய்யாமல் தனது கண்டத்தில் நிறுத்தினார். அதனால் தான் சிவனுக்கு நீலகண்டன் என்ற திருநாமமும் உண்டாயிற்று. இப்போது தேவர்களை பார்த்து, இனி எந்த பயமும் இல்லை. சென்ற பாற்கடலை கடையுங்கள் என்று. அவர்களும் கடைகிறார்கள். இப்போது ஒவ்வொரு பொருளாக வெளிப்படுகிறது. சிந்தாமணி, சூடாமணி, கெளத்துவமணி, மூதேவி, சீதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம் என ஒவ்வொன்றாக கிடைக்கிறது. பாற்கடலில் இருந்து வந்த பொருட்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர். பாற்கடலில் இருந்து வந்த சீதேவியை பெருமாள் ஆட்கொண்டார்.
அலைமகள் வழிபாடு
நவராத்திரி 4 ம் நாள் தேவி
சீதேவி பிராட்டி, மகாலட்சுமி என்ற திருநாமத்துடன் திருமாலை மணந்து, மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமி ஆனார். அலை கடலில் இருந்து பிறந்த தாயார் ஆதலால், அலைமகள் என போற்றப்படுகிறாள். நவராத்திரியின் நான்காவது நாளில் மலைமகளை வழிபட்டு முடிந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கிறோம். இந்த நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமி வடிவத்திலேயே நாம் வழிபட வேண்டும். இந்த நான்காம் நாளில் நாம் இடக் கூடிய கோலம் படிக்கட்டு வகையிலான கோலம். அதாவது மஞ்சள், அரிசி கலந்த அட்சதை அரிசியை கொண்டு, படிக்கட்டுகள் வடிவில் கோலம் இடம் வேண்டும்.
என்ன நெய்வேத்தியம்
ஜாதி மல்லி மலர்களால் மகாலட்சுமியை அர்ச்சனை செய்ய வேண்டும். இலை வகையில் கதிர்பச்சை என்கிற செடியின் இதழால் அர்ச்சனை செய்ய வேண்டும். பழ வகையில் கொய்யா பழமும், சாதம் வகையில் கதம்ப சாதமும் வைத்து அம்பாளை வழிபட வேண்டும். தானிய வகைகளில் பட்டாணி சுண்டல் படைத்து வழிபட வேண்டும். இன்று நாம் பாடக் கூடிய ராகம் பைரவி ராகம். அம்பாளுக்குரிய நிறம் கறுநீல நிறம்.
லட்சுமி வழிபாட்டின் பயன்கள்
என்ன மந்திரம், என்ன பலன்?
மேலே சொன்ன இந்த முறையில் விரதமிருந்து அம்பாளை வழிபட்டால் கடன் தொல்லை தீரும். கடன் என்றால் பிறரிடம் நாம் வாங்கிய கடன் மட்டுமல்ல பிறவி கடனால் ஏற்படும் தொல்லைகள், இன்னல்கள் போன்றவைகளும் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற முடியும். பிறவி கடன், பிறரிடம் வாங்கிய கடன் என இரண்டையும் போக்குபவளாக மகாலட்சுமி விளங்குகிறாள். நவராத்திரி நான்காம் நாளில் மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.