இது தெரியுமா ? சாலையோரம் நீண்ட நாள் கார் நிற்குதா? உடனே இத பண்ணுங்க!
சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் பழுதடைந்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் மீது மாநகராட்சியும், மாநகர போக்குவரத்து காவல்துறையும் நடவடிக்கை எடுப்பதே இல்லை. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்தது. அப்போது சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் பழைய வாகனங்களில் தேங்கும் நீரிலிருந்து டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த தா.கார்த்திகேயன், சாலையோரம் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை அகற்றுமாறு உத்தரவிட்டார். இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. அந்த தொகையில் மாநகரில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில்தான், சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டால் தகவல் அளிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூறுகையில், "சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால், மாநகராட்சியின் எக்ஸ் தளம் மூலமாகவும்.. 1913 என்ற எண் மூலமாகவும் பொதுமக்கள் புகாரளிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், "பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்கும் விதமாகவும் குறிப்பிட்ட சில இடங்களில் குப்பை பணிகளை நள்ளிரவுக்கு மாற்ற முடிவு மாநகராட்சி முடிவு செய்தது. அதாவது, 400 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் தூய்மை பணி நடைபெற உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குப்பைகளை சேகரிக்க முடியும் என்பதோடு, தூய்மை பணியாளர்களும் சிரமம் இன்றி வேகமாக பணியை செய்ய முடியும் என்பதால் மாநகராட்சி இந்த முடிவை எடுத்தது. முன்னதாக கடந்த ஆண்டு, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா மாமன்றக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, சாலையோரங்களில் கேட்பாரற்று கிடந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இத்தகைய வாகனங்களை ஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றப்படாமல் இடையூறாக இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, தற்போது மாநகாட்சி இந்த பிளானை கையில் எடுத்துள்ளது.