1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? இந்த கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகை கொண்டாடும் ஹிந்துக்கள்..!

1

மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் நாள் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் புனித மாதம்' என்று அழைத்தார். 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும்.

இதனால் தான் மொஹரம் பண்டிகையும் இஸ்லாமியர்களின் முக்கிய கொண்டாட்டமாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது காசவளநாடு புதூர். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்த கிராமத்தில் சாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையை காசவளநாடு மக்கள் விமர்சையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் இல்ல விழாவாக மொஹரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி, கடைப்பிடித்து வருகின்றனர்.

மொகரம் பண்டிகையையொட்டி தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கிராமத்தில் ஹிந்துக்கள் கூறும்போது, இஸ்லாமியரின் பண்டிகையான மொஹரம் பண்டிகையை ஹிந்துக்கள்அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம். எங்கள் கிராமத்தில் குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்தது. அது அல்லாவின் கையாக கருதி கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். 

இவ்விழாவை ஹிந்துக்கள் கொண்டாடும்போது இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். எங்கள் ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் மொஹரம் திருவிழாவின்போது பிறந்த வீட்டிற்கு வந்து பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் உள்ளங்கை உருவம் தாங்கியவற்றை நாங்கள் கரகம் எடுப்பதுபோல் அதற்கு பூக்களால் அலங்கரித்து இரவு முழுவதும் வீடு, வீடாக சென்ற பின்னர் விடியற்காலையில் அல்லாவிடம் வேண்டி கொண்டு தீ குண்டம் இறங்குவோம் என்றனர்.

Trending News

Latest News

You May Like