1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? வெறும் 6 ரூபாயில் உங்கள் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை பெறலாம்..!

1

நம் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு அவர்களுடைய சிறு வயது முதலே நாம் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் . அவர்களின் கல்வி செலவு மற்றும் திருமணச் செலவுகளுக்கு இந்த முதலீடு பயனுள்ளதாக அமையும். பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றவை. 

அந்தவகையில், இந்திய தபால் துறை வழங்கும், ஒரு சிறந்த காப்பீடு திட்டம்தான் பால் ஜீவன் பீமா யோஜனா என்பதாகும்..

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் என்பது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இதன் மூலம் குறைந்தபட்ச தொகையாக ரூ. 6 ரூபாய் முதல் தினமும் நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டும். உங்கள் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து போகும் பட்சத்தில் ரூ.1 லட்ச ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியும்.

இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தபால் அலுவலகக் கணக்கில் ஒரு நாளைக்கு ரூ. 6 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்... இதன்முதலீடு உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம்... உங்கள் குழந்தையின் கல்வி செலவுகளுக்காக முன்கூட்டியே பணத்தையும் சேமிக்கலாம்.

இந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: இத்திட்டத்திற்கு 8 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் பெயரில் விண்ணப்பிக்கலாம். Bal Jeevan Bima திட்டத்தின் மூலம் அந்த குழந்தையின் 18ஆம் அகவை வரை தான், நீங்கள் பயனடைய முடியும். 18 வயதை கடந்த பின்பு, உங்கள் குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், இத்திட்டம் செல்லுபடி ஆகாது. உங்களுக்கு எந்த வித காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட மாட்டாது.

பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (Postal Life Insurance) மற்றும் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (Rural Postal Life Insurance) என்று இரு தனித்தனி திட்டங்கள் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களின்படி காப்பீட்டுத் தொகை அளிக்கப்படுகிறது. போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின்படி நீங்கள் 3 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம். 20 வயதிற்கு மேல் எவ்வித பாதிப்பும் இன்றி உங்கள் குழந்தை நலமுடன் இருந்தால், ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின்படி நீங்கள் பாலிசி எடுத்திருந்தால், உங்களுடைய முதலீட்டுத் தொகையில் 1,000 ரூபாய்க்கு ஆண்டிற்கு 48 ரூபாய் போனஸாக அளிக்கப்படும். ஒருவேளை நீங்கள் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தின்படி பாலிசி எடுத்திருந்தால், உங்களுடைய முதலீட்டுத் தொகையில் 1,000 ரூபாய்க்கு ஆண்டிற்கு 52 ரூபாய் போனஸாக அளிக்கப்படும். முதிர்வு காலத்தின் போது இந்தத் தொகையை நீங்கள் மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான பால் ஜீவன் பீமா யோஜன திட்டத்தை பெற வேண்டுமானால், பெற்றோரின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. ஆனால், தங்களது 2 குழந்தைகளுக்கு மட்டுமே பாலிசியை பெற முடியுமே தவிர, 3வது குழந்தைக்கு முதலீடு செய்ய முடியாது.

இந்த திட்டத்தில் இணைய விரும்பும் பெற்றோர்கள், அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உரிய விண்ணப்பங்களை தந்து விண்ணப்பிக்கலாம். அதேபோல தங்கள் குழந்தைகளையும் தபால் நிலையத்திற்கு அழைத்து சென்று, இந்த திட்டத்தை தொடங்கச் செய்து, சேமிப்பு பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்கலாம்.

Trending News

Latest News

You May Like