இது தெரியுமா ? இனி பிளிப்கார்ட்டில் ஷாப்பிங் மட்டுமல்ல கடனும் வாங்கலாம்..!
இந்தியாவில் இ-காமர்ஸ் தளம் ஒன்று முதன்முறையாக கடன் வழங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது. வால்மார்ட்டுக்கு சொந்தமான flipkart நிறுவனம் இந்தியாவில் வங்கி சாராத நிதி நிறுவனமாக செயல்படுவதற்காக பிளிப்கார்ட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் தான் ரிசர்வ் வங்கி பிளிப்கார்ட் பைனான்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடன் வழங்கும் நிறுவனமாக செயல்படுவதற்கான அனுமதியை தந்திருக்கிறது. இந்தியாவில் இ-காமர்ஸ் பிரிவில் செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் கடன் வழங்கும் நிறுவனமாக செயல்படுவதற்கான அனுமதியைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இனி பிளிப்கார்ட் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடன் வழங்கும் சேவையில் ஈடுபட முடியும். அடுத்த சில மாதங்களில் பிளிப்கார்ட் பைனான்ஸ் நிறுவனம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் . இதற்காக ஊழியர்களை பணி நியமனம் செய்யும் வேலைகளில் பிளிப்கார்ட் இறங்கி இருக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பைனான்ஸ் பிரிவு பெங்களூருவின் கோரமங்களாவில் தலைமை அலுவலகத்தை அமைத்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளிப்கார்ட் செயலி வாயிலாகவே வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெறும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
தற்போதைக்கு பிளிப்கார்ட் ன் Super.Money என்ற தளம் மூலம் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டமைத்து வாடிக்கையாளர்களுக்கு பர்சனல் லோன்களை வழங்கி வருகிறது. இனி பிளிப்கார்ட் நிறுவனமே நேரடியாக கடன்களை வழங்கப் போகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சாதகமான அம்சம் ஏற்கனவே அந்த நிறுவனம் இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் தரவுகளை கொண்டிருக்கிறது. எனவே இந்திய மக்களின் நுகர்வு போக்கு ,கடன் வாங்கும் தன்மை குறித்த தரவுகள் அதனிடம் இருப்பதால் அதனை அடிப்படையாகக் கொண்டு முதல் கட்டமாக குறைந்த தொகையில் கடன் வழங்கும் சேவைகளை தொடங்க இருக்கிறதாம்.
பிளிப்கார்ட் தளத்தில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இனி இந்த நிறுவனமே நேரடி கடன், ஈஎம்ஐ வசதிகளை ஏற்படுத்தி தரும்.பிளிப்கார்ட் நிறுவனத்தை பொருத்தவரை 36 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக இருக்கிறது.