இது தெரியுமா ? நாம் பயன்படுத்தும் 1 ரூபாய் நாணயத்தை தயாரிக்க இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?
இந்தியாவில் நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கும், நாணயங்களை தயாரிப்பதற்கும் எவ்வளவு செலவாகிறது என்பதை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்க கூடிய குறைந்த மதிப்புள்ள நாணயம் 1 ரூபாய் நாணயமாகும். 2018 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்ட தகவலின் படி பார்க்கும்போது இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்கு ரிசர்வ் வங்கி 1.11 ரூபாய் செலவு செய்கிறது.
அதே வேளையில் இரண்டு ரூபாய் நாணயத்தை தயார் செய்வதற்கு 1.28 ரூபாயும், ஐந்து ரூபாய் நாணயத்தை தயார் செய்வதற்கு 3.69 ரூபாயையும் .பத்து ரூபாய் நாணயத்தை தயார் செய்வதற்கு 5.54 ரூபாயையும் செலவு செய்கிறது.
ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்படுவதால் நாணயங்களுக்கான உற்பத்தி செலவு அதிகம். ரூபாய் நோட்டுகள் என பார்க்கும்போது இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு 4 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது கிடையாது. இது தவிர 10 ரூபாய் நோட்டுகளை ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அச்சிடுவதற்கு 960 ரூபாயை அரசு செலவு செய்கிறது. ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு 1770 ரூபாய் செலவாகிறதாம்.
200 ரூபாய் நோட்டுகளை ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அச்சிடுவதற்கு 2370 ரூபாயை அரசு செலவு செய்கிறது. 500 ரூபாய் நோட்டுகள் என வரும்போது ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு அரசு 2290 ரூபாயை செலவு செய்கிறது.
இவ்வாறு அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் வங்கிகள் வாயிலாக மக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.