இது தெரியுமா ? இதைச் செய்தால் சென்னை மெட்ரோ ரயிலில் 20% தள்ளுபடி!
CMRL நிறுவனம் 2022 நவம்பர் மாதம் முதல் டிஜிட்டல் ஸ்டோர் வேல்யூ பாஸ் (SVP) என்ற ஒரு அட்டையை வழங்கி வருகிறது. இந்த அட்டையின் மூலம் மெட்ரோவில் பயணம் செய்தால் 20% வரை கட்டண சலுகை கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், பார்க்கிங் கட்டணத்திலும் சலுகை பெறலாம். இந்த பாஸ் CMRL மொபைல் செயலியில் மட்டுமே கிடைக்கும்.
CMRL செயலி மூலம் SVP பாஸ் வாங்கலாம். கடைசி முறை ரீசார்ஜ் செய்த தேதியில் இருந்து ஐந்து வருடங்களுக்கு இந்த பாஸ் செல்லுபடியாகும். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய QR code உருவாகும். இந்த QR code மூலம் மெட்ரோ நிலையத்திற்குள் சென்று வரலாம். "இது காண்டாக்ட்லெஸ் என்ட்ரி" என்று CMRL அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது, அட்டையை தொடாமல் தானியங்கி முறையில் உள்ளே போகலாம்.குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.3,000 வரை இந்த பாஸில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பயண கட்டணம் போக மீதி பணம் பாஸில் அப்படியே இருக்கும். அதை அடுத்த முறை பயன்படுத்தலாம்.
மெட்ரோவில் மட்டுமல்ல, CMRL பார்க்கிங் இடங்களிலும் இந்த SVP பாஸை பயன்படுத்தலாம். இதன் மூலம் பார்க்கிங் கட்டணத்திலும் சலுகை பெற முடியும்.
"டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தி சலுகை பெற, CMRL செயலியை பதிவிறக்கம் செய்து SVP பாஸை பயன்படுத்துங்கள்" என்று CMRL பயணிகளை ஊக்குவிக்கிறது.சுருக்கமாக சொன்னால், CMRL SVP பாஸ் என்பது மெட்ரோ பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். பணமில்லா பரிவர்த்தனை, கட்டண சலுகை, பார்க்கிங் சலுகை என பல நன்மைகளை உள்ளடக்கியது. CMRL செயலியை டவுன்லோட் செய்து இந்த சூப்பர் சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் தற்போது இரு வழித் தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித் தடங்களில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வரும் டிசம்பர் மாதம் போரூர் முதல் பூந்தமல்லி வரைக்கும் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மற்ற பகுதிகளுக்கான பணிகளும் நிறைவடைந்து ஒவ்வொன்றாக பயன்பாட்டுக்கு வர உள்ளது.