ரயிலில் தலையணை பெட்ஷீட் திருடினால் என்ன தண்டனை தெரியுமா ?

நீங்கள் ரயிலின் ஏசி பெட்டியில் பயணிக்கும் போது ரயில்வே உங்களுக்கு விரிப்புகள், தலையணை, போர்வைகள் போன்றவற்றை வழங்குகிறது
பயணத்தின் போது ரயில்வே வழங்கிய இந்த சாமான்களை நீங்கள் பயன்படுத்தலாம், இருப்பினும், பயணம் முடிந்ததும் இந்த சாமான்களை நீங்கள் பத்திரமாக வைத்து விட்டு போக வேண்டும். ஆனால், பயணத்திற்குப் பிறகு, சிலர் ரயில்வே வழங்கிய படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள்.
ஆனால் அப்படி எடுத்துச் செல்வது சரியா?எடுத்து சென்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? இதற்கு தண்டனைகள் ஏதும் உண்டா? என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீங்கள் யோசித்ததுண்டா. அதற்கான விடையை நாங்கள் சொல்கிறோம். ரயிலில் இருந்து இறங்கும் போது உங்களுடன் படுக்கை சாமான்கள் கிடைத்தால், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம்.
கொரோனா காலத்தில், ரயில்வே இந்த விரிப்புகள், போர்வைகள் வழங்குவதை நிறுத்தியது. ஆனால், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு மட்டும் இரண்டு தாள்கள், ஒரு போர்வை, ஒரு தலையணை, தலையணை உறை மற்றும் கைக்குட்டை ஆகியவற்றைக் கொடுக்கும். ஆனால், இப்போது ரயில்வே துறை அரிதாகவே கைக்குட்டைகளை வழங்குகின்றது.
2017-18 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, மேற்கு ரயில்வேயில் இருந்து 1.95 லட்சம் துண்டுகள், 81,736 பெட்ஷீட்கள், 5,038 தலையணைகள், 55,573 தலையணை உறைகள், 7,043 போர்வைகள் திருடப்பட்டுள்ளன.
தண்டனை கிடைக்குமா..?
ரயிலில் பயணம் செய்யும் போது கிடைக்கும் பெட்ஷீட், தலையணை அல்லது போர்வையை திருடினால், உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். ரயில்வே அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கலாம்.
என்ன தண்டனை?
ரயில்வே சொத்துச் சட்டம், 1966 இன் படி, திருடிய பொருட்களுடன் முதன்முறையாக பிடிபட்டால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.