உங்களுக்கு தெரியுமா ? நாங்கள் வெற்றி பெற முதல் காரணமே மோடிதான்: உதயநிதி!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக பவள விழா நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில், திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பணியாற்றியவர்களில் 75 வயது நிரம்பியவர்களுக்கு பொற்கிழி, சான்றிதழ், நினைவுப்பரிசும், 60 வயதைக் கடந்த 1000 தொண்டர்களுக்கு பொற்கிழியும் வழங்கப்பட்டது. இவற்றை வழங்கிய இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலி்ன் பேசியதாவது:-
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு 3 காரணங்கள் இருந்தன. அதில் முதல் காரணம் பிரதமர் மோடிதான். அவர்தான் திமுகவுக்கு வெற்றியை அளித்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்ற போது இருந்த பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு நிலைக்கும் பிரதமர் மோடி தான் காரணம். சென்னையில் புயலோ, வெள்ளமோ வந்தபோது ஒருமுறை கூட எட்டிப்பார்க்காத பிரதமர், தேர்தல் பிரச்சாரத்துக்காக 8 முறை வந்தார். தேர்தல் முடியும் தருவாயில் கூட விவேகானந்தர் பாறைக்கு வந்தார். சினிமா சூட்டிங் கூட சிறப்பாக நடைபெறாது. அந்தளவுக்கு அந்த சம்பவம் நடைபெற்றது.
திமுகவின் வெற்றிக்கு இரண்டாவது காரணம் 3 ஆண்டுகளில் முதல்வர் செய்த சாதனைகள். மூன்றாவதாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள். திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் பலமான கூட்டணி தான். வெற்றிக் கூட்டணியை அமைத்து அதை அரவணைத்து செல்வது தான், வெற்றிக்கு முக்கிய காரணமாக முதல்வர் பவள விழா நிகழ்ச்சியில் கூறினார். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும். இதை திமுக உறுப்பினர்கள் உள்ள தைரியத்தில் கூறுவதாக முதல்வர் தெரிவித்தார். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.