எத்தனை தொகுதி இருக்குனு தெரியுமா ? ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு - அண்ணாமலை தாக்கு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அது தமிழகத்திற்குப் பெரிய சிக்கலாக இருக்கும் என்று பல அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டனர். இதற்கிடையே இந்த அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாகச் சாடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எவ்வளவு தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்கள் இதில் பங்கேற்று பாஜகவை விமர்சித்துள்ளதாகச் சாடினார்.
இது தொடர்பாகச் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழக அரசு இவ்வளவு நாள் ரூம் போட்டு யோசித்து இப்போது தான் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறோம் என்பதையே கண்டுபிடித்துள்ளனர் போல.. தொகுதி மறுசீரமைப்பிற்கான காலவரையறை 2026ல் முடிகிறது. அப்போது நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மக்களிடம் சொல்வோம். நாடாளுமன்றம் எந்தளவுக்கு அதிகரிக்கப் போகிறது. எவ்வளவு சீட் அதிகரிக்கும் என்பதை நாங்கள் மக்களிடம் சொல்வோம். அதில் எதாவது தவறு இருந்தால் அப்போது இவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தலாம்.
இது மக்கள்தொகை அடிப்படையில் இருக்காது. Pro rata அடிப்படையிலேயே இருக்கும் எனச் சொல்கிறோம். இன்று எவ்வளவு இருக்கிறதோ, அதே தான் நாளையும் இருக்கும். தொகுதிகள் அதிகரிக்கப்பட்டாலும் இன்று இருப்பதைப் போல அதே 7.17% இடம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்றே சொல்கிறோம்.
இது எதையும் கேட்காமல் இப்போது எதற்காக அனைத்து கட்சி கூட்டம். இது தேவைதானா.. நாங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என நாடாளுமன்றத்தில் சொல்லும்போது அது குறித்து கேள்வி எழுப்பினார்கள். நாங்கள் அதற்கான விளக்கத்தைக் கொடுத்தோம். அதேபோல தொகுதி மறுவரையறை வரும் போது அது குறித்து விளக்குவோம். நீங்களாகவே கற்பனை குதிரைகளை ஓடவிட்டு. 38 இடங்களில் இருந்து 31 தொகுதிகளாகக் குறையும் என்கிறீர்கள். 848 தொகுதிகளாகும் போது தமிழகத்திற்கு 12 தொகுதிகள் குறையும் என்றும் நீங்களே சொல்கிறார்கள். இது நாங்கள் சொன்னோமா.. நாங்கள் Pro rata அடிப்படையில் இருக்கும் என்று மட்டுமே சொல்கிறோம்" என்றார்.
தொடர்ந்து விஜய் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஷூட்டிங் ஸ்பாட்ல யாரோ எழுதிக்கொடுத்ததை விஜய் படிச்சிட்டு இருக்காரு.. த.வெ.க சார்பாக வந்தவருக்கு நாடாளுமன்றத்தில் 543 தொகுதிகள் இருக்கிறது என்பதே தெரியவில்லை. அவர் ஏதோ நம்பரைச் சொல்கிறார். செய்தியாளர்கள் தவறை சுட்டிக்காட்டிய பிறகே தவெக சார்பாக வந்தவர் மாற்றிப் படிக்கிறார்.
இன்னொரு தலைவர் 453 என 5 நிமிடம் பேசியே முடித்துவிட்டார். இப்பட தான் அனைத்து கட்சி கூட்டம் இருந்தது. இந்தியாவில் எத்தனை எம்பி இடங்கள் இருக்கிறது என்பதே அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்த சில தலைவர்களுக்குத் தெரியவில்லை. அன்று அவர்கள் பேசியது ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவில் 543 தொகுதிகள் இருக்கிறது என்பது கூட தெரியாமல்.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்து வடை, பஞ்சி, போண்டா சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு பிரதமர் மோடியையும் பாஜகவையும் திட்டிவிட்டுக் கிளம்பியுள்ளனர். இதுவே அனைத்து கட்சி கூட்டத்தின் லட்சணமாக இருக்கிறது" எனக் கடுமையாகச் சாடினார்.