இப்படியொரு டிராபிக் ஜாம் நடந்தது பற்றி தெரியுமா..? 12 நாட்களாக இன்ச் கூட நகராமல் நின்ற வாகனங்கள்..!
உலகம் முழுவதுமே டிராபிக் ஜாம் எனப்படும் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட பெரு நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை காண முடிகிறது.
உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் தான் உள்ளது.இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர் 6-வது இடத்தில் உள்ளது.சென்னை போன்ற பெருநகரங்களில் டிராபிக் சிக்னல்களை கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள் ஒருவழியாகிவிடுவார்கள்.
இந்நிலையில், 12 நாட்களாக இன்ச் கூட நகராமல் நின்ற வாகனங்கள்..அப்படியொரு டிராபிக் ஜாம் நடந்துள்ளது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..?
இந்த வினோத சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து இங்கே பார்ப்போம்..சீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 110, தலைநகர் பீஜிங்கில் இருந்து கிங்டாங்சியா வரை செல்கிறது. இந்த சாலையில், மங்கோலியாவிற்கு கட்டுமான பொருட்கள், நிலக்கரிகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் டிரக்குகள் அதிக அளவில் சென்று கொண்டிருந்து இருக்கின்றன. இந்த டிரக்குகள் மெதுவாக சென்ற காரணத்தால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் சுமார் 100 கிமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தொலைதூரங்களுக்கு செல்ல குடும்பத்துடன் வந்த பயணிகள் இந்த டிராபிக் நெரிசலில் சிக்கி பரிதவித்துள்ளார்கள். அங்குலம் அங்குலமாக கார் நகர்ந்து சென்றதால் உணவு, தண்ணீர் என எதுவும் கிடைக்காமல் நடு சாலையில் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் மட்டுமே நகர முடிந்ததால் என்ன செய்வதென்று வாகனத்திற்குள்ளேயே முடங்கி போயிருக்கிறார்கள் வாகன ஓட்டிகள். சில வாகனங்களில் எரிபொருள் தீர்ந்து அங்கேயே நின்றுவிட்டன. 5 நாட்கள் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், பலரும் தங்கள் வாகனங்களையே தற்காலிக முகாம்கள் போல அமைத்து அங்கேயே தங்கிவிட்டனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் ஒருபக்கம் தவித்துக் கொண்டு இருக்க இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உள்ளூர் வாசிகள் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கும் விற்றுள்ளனர்.