1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட போட்டோஷூட் எடுப்பாங்களா ? மருத்துவர் மீது பாய்ந்த நடவடிக்கை!

1

கர்நாடக சித்ரதுர்கா மாவட்ட அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன் திருமண போட்டோ ஷூட் நடத்திய நிகழ்வு தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த போட்டோ ஷூட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

அந்த வீடியோவில், ஆண் மருத்துவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன், சிகிச்சை அறையில் மருத்துவ உபகரணங்களுடன் ஒருவருக்கு சிகிச்சை செய்வதுபோல நடிக்க, புகைப்படக்காரர்கள் படம் எடுத்து கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ, இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Karnataka

இதுகுறித்து சித்ரதுர்கா மாவட்ட மருத்துவ அதிகாரி ரேணு பிரசாத் கூறுகையில், “தேசிய சுகாதார இயக்கம் (NHM) மூலம் ஒரு மாதத்துக்கு முன்பு அவரை மருத்துவ அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையில் நியமித்தோம். இந்த சம்பவத்தில் வரும் அறுவை சிகிச்சை அறை செப்டம்பர் முதல் செயல்பாட்டில் இல்லை. தற்போது அது பழுதுபார்க்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “சித்ரதுர்கா அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் திருமண போட்டோ ஷூட் நடத்திய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அரசு மருத்துவமனைகள் மக்களின் சுகாதாரத்துக்காக இருக்கிறதே தவிர, தனிப்பட்ட வேலைக்காக அல்ல. எனவே மருத்துவர்களின் இத்தகைய ஒழுங்கீனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது.



சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் அரசு சேவை விதிகளின்படி பணிபுரிய வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் வசதிகள் சாதாரண மக்களின் சுகாதாரத்துக்கானது என்பதை அறிந்து கடமையைச் செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like