காலையில் எழுந்தவுடன் இவர்கள் முகத்தில் முழிக்க வேண்டுமா? அதிமுக விமர்சனம்..!
ஆவின் நிறுவனம் மீது சமீப காலமாக ஒருசில குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.பால்பாக்கெட்டுகள் திடமாக இல்லாமல் கிழிந்துவிடுவதாகவும், ஆவினில் ஊழல் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தசூழலில் கடந்த சில தினங்களாக முதல்வர் ஸ்டாலின் படம் பதித்து ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆவின் பால் கவரில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் படம் பதித்து விநியோகம் செய்து வருவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார்.அதனால் ஆவின் நிறுவனம் தொடர்பான ஊழல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்தெந்த ஆவின் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன என அனைத்து விவரங்களையும் அலசி ஆராய்ந்து வருகிறார்” என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுபோன்று, “காலையில் எழுந்தவுடன் இவர்கள் முகத்தில் முழிக்க வேண்டுமா? இவர்கள் முகத்தில் காலையில் முழித்தால் அன்றைய நாள் உருப்படுமா?.
எல்லாம் விளம்பர வெறி” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஓட்டேரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது விமர்சித்துள்ளார்.
அதே சமயம் ஆவினின் 50ஆண்டுகால பால் வணிக வரலாற்றில் இதுவரை தமிழக முதல்வர்களாக இருந்த எந்த ஒரு தலைவரின் புகைப்படத்தையும், எதற்காகவும் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு விளம்பரம் செய்ததில்லை,என்று தெரிவித்துள்ள, தமிழக பால் முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, “மழைநீர் சேகரிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கது.ஆனால் ஆட்சியாளர்களின் மனதை குளிர்விக்கும் விதமாக முதன்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோரது புகைப்படத்தையும்,கலைஞர் நூற்றாண்டு விழா இலச்சினையையும் அச்சிட்டு தவறான முன்னுதாரணத்தை ஆவின் நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.