மக்களே தெரிஞ்சிக்கோங்க ? வரும் அக்.1 முதல் பழநி கோயிலுக்கு மொபைல் போன் எடுத்து செல்ல தடை..!

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயில் வளாகத்திலும், கோயில் பின்னணியில் மொபைல் போனில் தங்களை படம்பிடித்து மகிழ்வர். இந்நிலையில் பழநி முருகன் கோயில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதில், அக்-1 முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது.
இந்த உத்தரவை பழநி மட்டுமின்றி அனைத்து கோயில்களிலும் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அக்-1 முதல் பழநி முருகன் கோயிலுக்குள் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்ததாவது: பழநி கோயிலுக்கு மொபைல் போன், கேமரா கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்துார் சுப்ரமணிய சாமி கோவிலில், சுய உதவி குழுக்கள் வாயிலாக, மொபைல் போன்கள் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதுபோல பழனியில், ’விஞ்ச், ரோப்’ கார் மையங்கள், மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் அருகே என, மூன்று இடங்களில் மொபைல் போன் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
ஒரு மொபைல் போனுக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி, தங்கள் மொபைல் போனை ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்து வந்து பெற்று கொள்ளலாம் என்று கூறினார்.